பக்கம் எண் :

பக்கம் எண்:87

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           வனப்பெனப் படூஉந் தெய்வந் தனக்கோர்
           உருவுகொண் டதுபோற் றிருவிழை சுடரத்
     95    தன்னமர் தோழி தன்புறத் தசைஇ
           அன்ன நாண வண்ணலைக் கவற்றாப்
           பொன்னரிக் கிண்கிணி புடைபெயர்ந் தரற்ற
           அரிச்சா லேகத் தறைபல பயின்ற
           திருக்கிளர் மாடஞ் சேர்ந்துவலங் கொண்டு
 
           (இதுவுமது)
    93 - 99 : வனப்பு....,...........கொண்டு
 
(பொழிப்புரை) அழகு என்று சொல்லப்படுகின்ற
  அருவமான தெய்வந் தனக்கென ஓர் உருவங்கொண்டு
  தோன்றினாற்போன்று தோன்றி அழகிய அணிகலன்கள்
  ஒளிவீசாநிற்பத் தன்னைப் பெரிதும் விரும்பும்உசா
  அத்துணைத் தோழியாகிய யாப்பியாயினியின் புறத்தே
  ஒதுங்கி அன்னப் பறவைகளும் தனது நடைகண்டு
  நாணவும் உதயண நம்பியைக் கவலச்செய்து தன்
  பொன்னாலியன்ற பரலையுடைய கிண்கிணி இடம்
  பெயர்ந்து ஒலியா நிற்பவும் மான் கண்போன்ற
  சாலேகங்களையும் அறைகள் பலவற்றையும் உடையதாய்
  அழகு கிளர்ச்சியுறுகின்ற காமதேவன் கோயிலையடைந்து
  தோழியரோடு கூடி அதனை வலம்வந்த பின்னர் என்க,
 
(விளக்கம்) வனப்பு-அழகு; அழகு என்னும்
  பண்பு நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது
  காட்டலாகாப் பொருளாகலின் 'வனப்பெனப்
  படூஉந்தெய்வம் தனக்கோர் உருவுகொண்டது போல்'
  என்று கூறினர் இதனை,
          'ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா
           கற்பும் ஏரும் எழிலும் என்றா
           சாயலும் நாணும் மடனும் என்றா
           நோயும் வேட்கையும் துகர்வும் என்றாங்கு
           ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
           நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது
           காட்.ட லாகாப் பொருள என்ப'
  எனவரும் தொல்காப்பியத்தான் (பொருளியல். 53)
  உணர்க- நை.ட கண்டு அன்னம் நாண என்க.
  அண்ணல்-உதயணகுமரன். அரி - பரல். அரிச்சாலேகம்.
  மான்கட் காலதர் மாடம்; காமதேவன் கோயில்.