பக்கம் எண் :

பக்கம் எண்:870

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          அரிதிற் பெற்ற வவந்திகை யுள்ளம்
          உரிதி னுணர்ந்த வுதயண குமரன்
          ஓங்குபுகழ் மாதவ னுரைத்ததற் குடம்பட்டு
          வாங்குசிலை பொருதோள் வாழ்த்துந ரார
    90    அரும்பொருள் வீசிய வங்கை மலரிப்
          பெரும்பொரு ளாதலிற் பேணுவனன் விரும்பி
          நீரிற் கொண்டு நேரிழை மாதரைச்
          சீரிற் கூட்டுஞ் சிறப்பு முந்துறீஇ
          நாடு நகரமு மறிய நாட்கொண்டு
    95    பாடிமிழ்  முரசம் பல்லூ ழறைய
          மாக விசும்பின் வானோர் தொக்க
          போக பூமியிற் பொன்னகர் பொலிய
 
        (உதயணன் விரிசிகையை மணத்தற்கு  நன்னாள் கோடல்)
          86 - 97 : அரிதின்............பொலிய
 
(பொழிப்புரை) அதுகேட்டுத் தான் அருமையாக வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற அவ்வவந்திநாட்டரசன் மகளினது திரு உள்ளத்தை உணரும் உரிமையோடு உணர்ந்துகொண்டே அம்மன்னவன் உயர்ந்த புகழையுடைய பெரிய தவத்தையுடைய அம்முனிவன் கூறியதற்குத் தானும் அங்ஙனமே செய்குவல் என்று உடன்பட்டு வளைந்த விற்கிடந்து அழுத்திய தன் தோள்களை வாழ்த்துகின்ற நல்லிசைப்புலவர் முதலியோர் நுகரும்படி பெறுதற்கரிய பொருள்களை எளிதில் வழங்கும் தனது உள்ளங்கையை விரித்து உலகின்கண் மிகப் பெரிய பொருளாதலின் அதைப் பெறுதற்குத் தானும் வேணவாக்கொண்டு விரும்பி நேரிய அணிகலனணிந்த அவ்விரிசிகை நங்கையை அவட்குரியோர் நீரோடு வழங்க ஏற்றுக்கொண்டு சிறந்த தன் அரண்மனைக்கட் சேர்க்கும் சிறப்பினை முன்வைத்துத் தன்னாட்டு மக்களும் நகர மக்களும் அறிந்துகோடற்பொருட்டுப் பலரறி மணம் செய்தற்கு நன்னாட்கொண்டு அச்செய்தியை ஒலிபரப்பும் முரசத்தை முழக்கிப் பன்முறையும் அறிவிக்கும்படி செய்து மேலும் தனது பொன்னகரமாகிய அக்கோசம்பி நகரம் வானத்தின் கண்ணுள்ள தேவர்கள் கூடிவாழும் போக பூமிபோலப் பொலிவுறும்படி ஒப்பனை செய்விப்ப என்க.
 
(விளக்கம்) அவந்திகை : வாசவதத்தை. இஃது அவட்கு இடத்தால் வருபெயர். உரிதின் - உரிமையோடு. மாதவன் - விரிசிகை தந்தை. வாழ்த்துநர் - வாழ்த்தும் புலவர் முதலியோர். ஆர - நுகர. மலரி - விரித்து. பெரும்பொருள் என்றது விரிசிகையை. என்னை?

  'பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
   திண்மையுண் டாகப் பெறின்' (குறள். 54)

எனவரும் திருக்குறளும் காண்க. இனி இவ்வாசிரியரே,

  'வானுறை யுலகினும் வையக வரைப்பினும்
   தான விளைவினுந் தவத்தது பயத்தினும்
   எண்ணரும் பல்லுயி ரெய்தும் வெறுக்கையுட்
   பெண்டிருண் மிக்க பெரும்பொருள் இன்மையின்
   உயிரெனப் படுவ துரிமை யாதலின்' (1-38 : 263-7)


என மிக அழகாகக் கூறுதலுங் காண்க. நீர்வார்த்துக் கொடுப்பக் கொண்டு என்க. மாதரை - விரிசிகையை. சீர்இல் - சிறந்த அரண்மனை. சிறப்போடு கூட்டும் எனினுமாம். நாடு நகரம் என்பன ஆகுபெயர்கள். நாள் - மணம் செய்தற்குரிய நன்னாள். அறைய - அறைவித்து. மாக விசும்பு : இருபெயரொட்டு. பொன்நகர் பொலிய ஒப்பனை செய்வித்து  என்க.