பக்கம் எண் :

பக்கம் எண்:871

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          நாற்பான் மருங்கினு நகரத் தாளர்
          அடையாக் கடையர் வரையா வண்மையர்
    100    உடையோ ரில்லோர்க் குறுபொருள் வீசி
          உருவத் தண்டழைத் தாபதன் மடமகள்
          வருவழிக் காண்டு நாமென விரும்பித்
 
        (நகரமாந்தர் விரிசிகை வரவுகாண விரும்புதல்)
              98 - 102 : நாற்பால்.........விரும்பி
 
(பொழிப்புரை) அந்நகரத்தின்கண் அரண்மனையைச் சூழ்ந்து நான்கு பக்கங்களினும் வாழும் மாந்தர்கள் அத்திருமண முரசு முழக்கங் கேட்டு ஒவ்வொருவரும் மகிழ்ந்து அடையாத வாயிலை உடையாராய் வரையாது வழங்கும் வள்ளன்மையை உடையராய்ச் செல்வம் உடையோர் அஃதில்லாத ஏழைகட்கு மிக்க பொருளை வழங்கி, அழகிய தண்ணிய தழையாடையை யுடுத்த அத்துறவிமாமகளை அவள் வருகின்ற வழியில் வைத்துக் காண்பேம் என்று பெரிதும் விரும்பி என்க.
 
(விளக்கம்) அடையாக்கடை - திறந்த வாயில். இரவலர் தடையின்றி வருதற்கு வாயிற் கதவுகளைத் திறந்து போகட்டனர் என்பது கருத்து. வரையாவண்மை - இன்னார் இனையோர் என்று வரையறை செய்யாது எல்லோர்க்கும் வழங்கும் வள்ளற்றன்மை. உடையோர் இல்லோர் என்பன செல்வமுடையோர் அஃதில்லோர் என்னும் பொருளுடையன. உறுபொருள் - மிக்க பொருள். அறத்தாலீட்டிய பொருளுமாம். வீசி - வழங்கி. உருவம் - அழகு. தழை - தழையாடை. மடமகள் : விரிசிகை.