பக்கம் எண் :

பக்கம் எண்:874

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          வண்ட லாடிய மறுகினுட் காண்பவை
    125    கண்டினிது வரூஉங் கால மன்றெனக்
          காவல் கொண்டன ரன்னையர் நம்மென
          நோவன ராகி நோய்கொள் வோரும்
 
                   (இதுவுமது)
          124 - 127 : வண்டல்.........கொள்வோரும்
 
(பொழிப்புரை) எங்கள் தாய்மார் எம்மை நோக்கி ஏடிமாரே! நீவிர் மணல்வீடு கட்டி விளையாட்டயர்ந்த தெருவின்கண் காணும் காட்சியை யெல்லாம் இனிது கண்டு வரும் பேதைப் பருவம் உடையீர் அல்லீர். இப்பொழுது பெதும்பைப் பருவத்தினிர் ஆதலின் புறத்தே போகாதே கொண்மின் ! என்று காவல் செய்யாநின்றனர் என்று மனம் நொந்து வருந்துவோரும் என்க.
 
(விளக்கம்) வண்டல் - விளையாட்டு. மறுகு - வீதி. காண்பவை கண்டு வரூஉம் காலமன்று என்றது நீயிர் இப்பொழுது பேதைப்பருவம் கடந்து பெதும்பைப் பருவம் எய்தினிர் என்றவாறு. அன்னையர் - செவிலித்தாயர். நம் - நம்மை; இரண்டனுருபு தொக்கது. நோய்கொள்வோர் - வருந்துவோர்.