பக்கம் எண் :

பக்கம் எண்:875

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          ஏனையோர் பிறரும் புனைவன ரீண்டி
          விரைகமழ் கோதை விரிசிகை மாதர்
    130    வருவது வினவிக் காண்பது மால்கொளக்
          காண்பதொன் றுண்டெனக் கைத்தொழின் மறக்கும்
          மாண்பதி யியற்கை மன்னனு முணர்ந்து
 
                    (இதுவுமது)
          128 - 132 : எனையோர்.........உணர்ந்து
 
(பொழிப்புரை) இங்ஙனமே பிற மகளிரும் மற்றவரும் தம்மை ஒப்பனை செய்து கொண்டவராய் யாண்டும் நெருங்கி மணங் கமழும் மலர்மாலையினையுடைய விரிசிகை நங்கை வருவதனை ஒருவரை ஒருவர் வினவி அவளைக் காண்டற்குப் பெரிதும் விரும்பாநிற்ப; இவ்வாறு அந்நகரத்து மாந்தர் தாம் இனிக் காண்பதற்குரிய தெய்வக் காட்சி யொன்றுளது என்று அதனையே நினைந்து தத்தம் கைத்தொழிலையும் மறந்து மால் கொள்ளும் தன்மையை உதயண மன்னனும் ஒற்றரால் உணர்ந்து கொண்டு என்க.
 
(விளக்கம்) புனைவனர் - ஒப்பனை செய்துகொண்டு. வருவதனை வினவி என்க. மால் - மயக்கம். ஒரு தெய்வீகக் காட்சியுண்டு என்று கருதி என்க. மாண்பதி - மாட்சிமையுடைய அந் நகரத்து வாழும் மாந்தர்கள்; ஆகுபெயர். மன்னன் : உதயணன்.