பக்கம் எண் :

பக்கம் எண்:877

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          மறுவின் மாத ரொழியநங் கோயில்
          நறுநுதன் மகளிரொடு நன்மூ தாளரும்
    145    நண்பிற் றிரியாது பண்பொடு புணர்ந்த
          காஞ்சுகி மாந்தருந் தாஞ்சென்று தருகென
          நடந்தே வருமா னங்கைநந் நகர்க்கென
          நெடுந்தேர் வீதியு மல்லா விடமும்
          கொடைநவில் வேந்தன் கொடிக்கோ சம்பி
    150    நிலையிடம் பெறாது நெருங்கிற்றாற் சனமென்.
 
                    (இதுவுமது)
            143 - 150 : மறுவில்..............சனமென்
 
(பொழிப்புரை) அந்நங்கை நம்மக்கள் விரும்புதற் கேற்ப நம் அரண்மனை காறும் நடந்தே வருவாள். ஆதலால் அரண்மனையின்கண் உறைகின்ற நம் தேவிமார் மூவரும் நிற்க; ஏனைய நறிய நுதலையுடைய மகளிரோடு நல்ல மூதறிஞரும் நம்பால் வழிவழி வந்த கேண்மையிற் பிறழாது நற்குணத்தோடு கூடிய காஞ்சுகி மாக்களும் அப்பெருமகளை எதிர்கொண்டு அழைத்து வருக! என்று கட்டளை இடுதலாலே கொடைத் தொழில் மிக்க அவ்வேந்தனது கொடியுயர்த்த அக்கோசம்பி மாநகரத்தில் நிலைத்து நிற்றற்கும் இடம் பெறாதபடி மாந்தர் நெருங்கினர் என்க.
 
(விளக்கம்) மறுவில் மாதர் என்றது வாசவதத்தையை யுள்ளிட்ட தேவிமார் மூவரையும் என்க. மூதாளர் - அறிவானும் ஆண்டானும் முதிர்ந்த சான்றோர். பண்பு - பாடறிந் தொழுகுந் தன்மை. தருக - அழைத்து வருக. நங்கை : விரிசிகை. வேந்தன் : உதயணன். சனம் - மக்கள்.

               15. விரிசிகை வரவு குறித்தது முற்றிற்று