பக்கம் எண் :

பக்கம் எண்:878

உரை
 
4. வத்தவ காண்டம்
 
16. விரிசிகை போத்தரவு
 
            நெருங்கிய பல்சனம் விரும்புபு நோக்க
            ஒள்ளிழை மாதரைப் பள்ளியு ணின்று
            திருவமர் சிவிகையுட் சுமந்தனர் கொணர்ந்து
            பெருநகர் நெடுமதிற் புறமருங் கியன்ற
     5      தேவ குலத்தொரு காவினு ளிரீஇ
 
           (விரிசிகையின் தமர் அவளைக் கொணர்தல்)
                1 - 5 : நெருங்கிய....................இரீஇ
 
(பொழிப்புரை) இவ்வாறு துறவி மகளாகிய அவ்விரிசிகை நங்கையைக் கண்டு களித்தற் பொருட்டுக் கொடிக் கோசம்பியின்கண் நிலையிடம் பெறாது நெருங்கிய பல்வேறு மக்களும் அவளைக் காண்டற்கு விரும்பி அவள் வரவினை எதிர்நோக்கி இராநிற்ப, இனி ஒள்ளிய அணிகலனுடைய அவ்விரிசிகையைத் தவப் பள்ளியினின்றும் அவள் தமர் அவளை அழகு பொருந்திய சிவிகையுள் வைத்துச் சுமந்து கொணர்ந்து பெரிய கோசம்பி நகரத்தைச் சூழ்ந்துள்ள நெடிய மதிலின்புறத்தே யமைந்த தேவர் கோயிலையுடைய ஒரு பூங்காவின்கண் வைத்து என்க.
 
(விளக்கம்) பள்ளி - தவப்பள்ளி. திரு - அழகு. அவள் தமர் சுமந்து கொணர்ந்து என்க. நகர் - கோசம்பி. தேவகுலம் - தேவர் கோயில். இரீஇ - வைத்து.