உரை |
|
3. மகத காண்டம் |
|
6. பதுமாபதியைக் கண்டது |
|
100 கழிபெருஞ் சிறப்பிற் கன்னி
மகளிர்
அழியுந் தான மவ்விடத்
தருளி
நான்முகன் மகளிர் நூன்முதற்
கிளந்த
ஒழுக்கிற் றிரியா ளுறுபொருள்
வேண்டும்
வழுக்கா வந்தணர் வருக யாவரும்
105 விலக்கவு நீக்கவும் பெறீஇ
ரென்றுதன்
தலைத்தாண் முதியர்க்குத் தானே
கூறி
நோன்புமுத றொடங்கித் தேங்கமழ்
கோதை
தலைநாட் டானந் தக்கவை யளித்தலிற்
|
|
(பதுமாபதி தானம்
அளித்தல)் 100 - 108 :
கழி................அளித்தலின்
|
|
(பொழிப்புரை) மிகப் பெரிய
சிறப்பினையுடைய கன்னி மகளிர் தங்கன்னிமையழிந்து தமக்குத் திருமணமாதற்
பொருட்டுச் செய்கின்ற தானத்தை அவ்விடத்திலே வழங்கி அருகக்கடவுள்
மகளிர்க்கு ஓதிய நூலிடத்தே கூறப்பட்ட ஒழுக்கத்திலே பிறழாதவளாய்
மிக்க பொருளை வேண்டிவந்த நல்லொழுக்கத்தினின்றும் பிறழாத
அந்தணர் எல்லாம் நம்பால் வருவாராக! அவரை நும்முள் ஒருவரும் தடுக்கவும்
போக்கவும் செய்யாதொழிமின்! என்று தன் காவல் முதியர்க்கெல்லாம் தானே
கட்டளையிட்டுத் தேன்கமழும் மலர்மாலையணிந்த கோமகளாகிய பதுமாபதி காமன்
நோன்பைக் காரணமாகக் கொண்டு அந்நோன்பின் முதல் நாள் வழங்கும்
தானத்தைத் தகுதியான பொருள் கொண்டு வழங்குதலாலே என்க.
|
|
(விளக்கம்) கழிபெருஞ்
சிறப்பு - மிகப் பெரிய சிறப்பு. அழியும் தானம் - கன்னிமையழிதற்குக்
காரணமான தானம் என்க, எனவே தமக்குத் திருமணம் நிகழும் பொருட்டுச்
செய்யும் தானம் என்றாயிற்று. நான்முகன் - அருகக்கடவுள்.
மகளிர் நூல்-மகளிரைப் பற்றிக் கூறிய நூலென்க. உறுபொருள்-மிக்க பொருள்,
வழுக்கா- பிறழாத, தலைத்தாள் முதியர் - தன் மருங்கே நின்று காக்கும்
காஞ்சுகி முதியர். கோதை - பதுமாபதி. தலைநாட்டானம் - முதனாளில்
வழங்குந் தானம். தக்கவை - தகுதியான பொருள்.
|