உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
16. விரிசிகை போத்தரவு |
|
15 தளிரினும் போதினு
மொளிபெறத்
தொடுத்த
சேடுறு தாமஞ் சிறந்தோன்
சூட்டிய வாடுறு
பிணையலொடு வகைபெற
வளாஅய்க்
குளிர்கொள் சாதிச் சந்தனக்
கொழுங்குறைப்
பளிதம் பெய்த பருப்பிற் றேய்வையின்
20 ஆகமு முலையுந் தோளு
மணிபெறத்
தாரையுங் கொடியுந் தகைபெற வாங்கி
|
|
(இதுவுமது) 15
- 21 :
தளிரினும்.................வாங்கி
|
|
(பொழிப்புரை) தளிராலும் மலராலும் ஒளியுண்டாகத் தொடுக்கப்பட்டு அழகு பொருந்தியதும் பண்டு மன்னருட்
சிறந்தோனாகிய உதயணனால் சூட்டப்பட்டதும் வாடுதலுற்றதும் ஆகிய அம்மாலையோடு
சேர்த்துவைத்து வளைத்து அணிந்து குளிர்ச்சி கொண்ட உயர்ந்த சந்தன மரத்தினது கொழுவிய
கட்டையினைத் தேய்த்து அதனோடு பச்சைக் கருப்பூரம் பெய்யப்பட்ட நுண்மையுடைய
குழம்பினால் அவளது மார்பினும் முலையினும் தோளினும் அழகுறத் தாரையும் கொடியுமாக வளைத்து
எழுதி என்க.
|
|
(விளக்கம்) சேடு - அழகு; பெருமையுமாம். தாமம் - மாலை.
சிறந்தோன் : உதயணன். வாடுறுபிணையல் - வாடுதலுற்ற மாலை. ஆகவே பண்டு உதயணன் தனக்குச்
சூட்டிய மாலை பெரிதும் உலர்ந்துபோய் பின்பும் அதனைப் பேணி விரிசிகை
சூடிக்கொண்டிருந்தாள் என்பது பெற்றாம். சாதிச் சந்தனம் - சந்தனத்துள் வைத்துச்
சிறந்த சந்தனம் என்க. குறை - கட்டை. பளிதம் - பச்சைக் கருப்பூரம். பருப்பு - பருமை.
பருப்பு இல் எனவே நுண்ணிய தேய்வை என்றாராயிற்று. தேய்வை - குழம்பு. தாரை - வரிசை.
தகை - அழகு. வாங்கி - வளைத்து. வளைத்தெழுதி
என்றவாறு.
|