பக்கம் எண் :

பக்கம் எண்:881

உரை
 
4. வத்தவ காண்டம்
 
16. விரிசிகை போத்தரவு
 
          இருந்தா ளிளம்பனை விரிந்திடை விடாஅ
          முளைநுகும் போலை முதலீர்க்கு விரித்துத்
          தளையவி ழாம்பற் றாஅள் வாட்டி
    25    நீல நெடுமயி ரெறியுங் கருவிக்
          காலென வடிந்த காதணி பெறீஇச்
          சில்லெ னரும்பு வல்லிதி னமைத்து
          நச்சர வெயிற்றி னல்லோன் புனைந்த
          நெற்சிறு தாலி நிரல்கிடந் திலங்கக்
    30    கடைந்துசெறித் தன்ன கழுத்துமுதற் கொளீஇ
 
                     (இதுவுமது)
           22 - 30 : இருந்தாள்............கொளீஇ
 
(பொழிப்புரை) கரிய அடிப்பகுதியினையுடைய இளம் பனையினது விரிந்து இடைவிடாது சேர்ந்திருக்கும் முளையாகிய குருத்தோலையை ஈர்க்குடன் விரித்து, கட்டவிழ்ந்து மலர்ந்த ஆம்பலினது தண்டினைத் தோற்கச்செய்து, நீல நெடிய மயிரினைக் கத்தரிக்கும் கருவியாகிய கத்தரிகையின் கால்போல வடிந்து தூங்கும் காதுகளில் அணியாக வைத்துத் தொழில் நன்மையுடைய துறவியொருவன் சிலவாகிய அரும்புகளைத் தொழில் வன்மையுண்டாக நச்சுப் பாம்பின் பல்லொழுங்குபோல நிரல்பட அமைத்துத் தொடுத்துக் கொடுத்த ''சிறுநெற்றாலி'' என்னும் அணிகலன் நிரல்பட்டுக் கிடந்து திகழாநிற்கும்படி கடைந்து செருகி வைத்தாற்போன்ற கழுத்தினது அடிப் பகுதியில் அணிந்து என்க.
 
(விளக்கம்) இருந் தாள் - கரிய அடிப்பகுதி. ஓலையின் வளம் கூறுவார் பனைக்கு இளமை கூறினார். நுகும்போலை - குருத்தோலை. ஆம்பற் றாளை வாட்டி என்றது ஆம்பற்றாளினுங் காட்டில் அழகுமிக்க காது என்றவாறு. மயிரெறியுங் கருவி - கத்தரிகை. நல்லோன் - தொழில் நன்மையுடையோன். எனவே துறவியருள் வைத்து ஒருவன் என்க. நல்லோன் - உதயணன்
என்பாரும் உளர். உதயணன் இங்ஙனம் ஒன்று புனைந்து அணிந்தான் என்பது முன்னர்க் கூறப்படாமையானும் ஈண்டுக்கழுத்து முதற்கொளீஇ எனப் புதுவதாக அணிதல் கூறப்படுதலாலும் அது பொருந்தாமை உணர்க. நெற்சிறுதாலி - சிறு நெற்றாலி என்க. இஃது ஒரு கழுத்தணிகலன். எனவே துறவோர் பள்ளியுள் நல்லோனாகிய ஒரு துறவி பொன்னால் இயற்றப்படும் சிறு நெற்றாலிபோல அரும்புகளாற் றொடுத்தமைத்து வழங்கிய அணிகலம் என்று கொள்க.