பக்கம் எண் :

பக்கம் எண்:884

உரை
 
4. வத்தவ காண்டம்
 
16. விரிசிகை போத்தரவு
 
           உரையினு மோத்தினு முவப்பக் கூறிய
          சாங்கிய மடமக டலையாச் சென்ற
  45      காஞ்சுகி மாந்தர்க் கோம்படை கூறி
          அடுத்த காதற் றாயர் தவ்வையர்
          வடுத்தீர் தந்தை வத்தவர் கோவென
          விடுத்தனர் மாதோ விரிசிகை தமரென்.
 
                (விரிசிகையை விடுத்தல்)
          43 - 48 : உரையினும்.................தமரென்
 
(பொழிப்புரை) வாய்மொழியாலும் நூல் மேற்கோளானும் தாம் மகிழ முகமன் கூறிய சாங்கிய மகள் தலைமையிற் சென்ற காஞ்சுகி மக்கள்பால் விரிசிகையை ஓம்படை சொல்லி அவள் தமர் "பெரியீர்! இவளுக்கு உற்ற அன்புடைத் தாயர் இவள் தமக்கையராகிய வாசவதத்தை முதலிய தேவிமார் மூவரும் ஆவர்! அங்ஙனமே வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணனே இவளுக்குக் குற்றமற்ற தந்தை ஆவன் என்று கூறி விடுத்தனர் என்க.
 
(விளக்கம்) உரை - வாய்மொழி. ஓத்து - நூல்; என்றது நூலினின்றும் எடுத்துக் கூறும் மொழிகளை. ஓம்படை - பாதுகாப்புச் சொல். தவ்வையர் - தமக்கைமார்; என்றது வாசவதத்தை முதலிய தேவிமார் மூவரையும். கோ : உதயணன். விரிசிகை தமர் மாந்தர்க்குக் கூறி அவளை விடுத்தனர் என்க. தமர் என்றது ஈண்டுத் தவப்பள்ளியில் வாழும் விரிசிகை தாய் முதலிய முதுமகளிரை.

                    16. விரிசிகை போத்தரவு முற்றிற்று.