பக்கம் எண் :

பக்கம் எண்:886

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
          
     10    காசறச் சென்றபின் மாசறு திருநுதல்
           விரிசிகை மாதர் விளையாட்டு விரும்பும்
           பள்ளியுட் டன்னொடு பலநாள் பயின்ற
           குயிலு மயிலுங் குறுநடைப் புறவும்
           சிறுமான் பிணையு மறுநீங் கியூகமும்
     15    காப்பொடு பேணிப் போற்றுவன ளுவப்பிற்
           றந்த பாவையுந் தலையாத் தம்முடை
           அந்தணர் சாலை யருங்கல மெல்லாம்
           அறிவனர் தழீஇத் தகைபா ராட்டிப்
           பூப்புரி வீதி பொலியப் புகுந்து
     20    தேற்றா மென்னடைச் சேயிழை தன்னொடு
           செல்வோர் கேட்பப் பல்லோ ரெங்கும்
 
        (விரிசிகையின் தமர் அவள் விளையாடிய பொருள்களைக்
கொண்டு அவளுடன் செல்லல்)
               10 - 21 : மாசறு.........கேட்ப
 
(பொழிப்புரை) குற்றம் தீர்ந்த அழகிய நுதலையுடைய அவ்விரிசிகை நங்கை விளையாட்டினை விரும்பும் பேதைப் பருவத்தே தன்னோடு வைத்துப் பலநாள் ஆடல் பயின்ற குயிலும், மயிலும், குறிய நடையினையுடைய புறவும், சிறிய பிணைமானும், குற்ற மகன்ற கருங்குரங்கும், அவள் பாதுகாவலோடு பேணி மகிழ்ந்து போற்றித் தந்த விளையாட்டுப்பாவையும், முதலாகத் தம்முடைய அறவோர் பள்ளிக்கியன்ற அரிய அணிகலன்களும் பிறவும் ஆகிய எல்லாப் பொருள்களையும் ஆராய்ந்தெடுத்து அவற்றின் அழகினைப் பாராட்டி மலரிட்டுப் பரப்பிய வீதி பொலிவுறும்படி புகுந்து தெளிவில்லாத மெல்லிய நடையினையுடைய அவ்விரிசிகையோடு செல்பவர் தம் செவியாற் கேட்கும்படி என்க.
 
(விளக்கம்) பள்ளி - தவப்பள்ளி. யூகம் - கருங்குரங்கு. பாவை - விளையாட்டுப் பாவை. தலையா - தலையாக. அந்தணர் - துறவோர். சேயிழை : விரிசிகை.