உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
17. விரிசிகை வதுவை |
|
செல்வோர் கேட்பப்
பல்லோ ரெங்கும் குடிமலி
கொண்ட கொடிக்கோ சம்பி
வடிநவில் புரவி வத்தவர்
பெருமகற் காக்கம்
வேண்டிக் காப்புடை முனிவர் 25 அஞ்சுதரு
முதுகாட் டஞ்சா ரழலின்
விஞ்சை வேள்வி விதியிற்
றந்த கொற்றத் திருமகண்
மற்றிவ டன்னை ஊனார்
மகளி ருள்வயிற் றியன்ற
மானேர் நோக்கின் மடமக ளென்றல் 30 மெய்யன்
றம்மொழி பொய்யென் போரும்
|
|
(கண்டோர்
கூற்று)
21 - 30 :
பல்லோர்...........என்போரும்
|
|
(பொழிப்புரை) அந் நங்கையின் வரவினை எதிர்பார்த்து வழி மேல் விழிவைத்து நின்ற நகரமாந்தர்
பலரும் "எங்கெங்கும் குடிமக்கள் மலிதலைக்கொண்ட கொடியையுடைய இக் கோசம்பி
மன்னனாகிய வடித்தல் பயின்ற குதிரையையுடைய உதயணனுக்கு ஆக்கம் செய்தலை விரும்பித் தம்
பொறிகளை அடக்கும் துறவோர் அச்சம் தருகின்ற முதுகாட்டின்கண் அரிய ஐந்து தீயினால்
வித்தையையுடைய வேள்வி செய்து அம் முறைமையினால் படைத்துத் தந்த வெற்றித் திருமகளே
இவள் கண்டீர் ! இவ்வுண்மை தேறாது இவளை ஊனுடல் பொருந்திய மானிட மகளிர்
வயிற்றிற்றோன்றிய மான்போலும் நோக்கினையுடைய ஒரு மடப்பமுடைய மகள் என்று கூறுதல்
மெய்யாகாது. அம்மொழி பொய்யேயாகும்!" என்று கூறுவோரும் என்க.
|
|
(விளக்கம்) வடி - வடித்தல்; வயப்படுத்துதல். காப்புடை -
பொறிகளைக் காத்தலுடைய. முதுகாடு - சுடுகாடு. ஆரஞ்சழல் என மாறுக. அரிய ஐந்து தீ என்க.
ஊனார் மகளிர் - மானிட மகளிர் வயிற்றினுள் இயன்ற என மாறுக; உருபு மயக்கமுமாம்.
தங்கூற்றை வற்புறுத்துவார் மெய்யன்று என்றொழியாது மீண்டும் அம் மொழி பொய் என்றார்
என்க.
|