பக்கம் எண் :

பக்கம் எண்:889

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
         அறுவி றெண்ணீ ராழ்கய முனிந்து
         மறுவில் குவளை நாண்மலர் பிடித்து
         நேரிறைப் பணைத்தோள் வீசிப் போந்த
   40    நீரர மகளிவ ணீர்மையு மதுவே
         வெஞ்சினந் தீர்ந்த விழுத்தவன் மகளெனல்
         வஞ்ச மென்று வலித்துரைப் போரும்
 
                       (இதுவுமது)
          37 - 42 : அறுவில்...........உரைப்போரும்
 
(பொழிப்புரை) அதுகேட்ட வேறு சிலர் "இவள் அறாத தெளிந்த நீரையுடைய ஆழ்ந்த நீர்நிலையினை வெறுத்துக் குற்றமற்ற குவளையினது நாள்மலரை ஒரு கையிற் பிடித்து நேரிய இரேகைகளையுடைய பணைத்த மற்றொரு கையை வீசி வீதியில் நடந்துவந்த நீரர மகளே கண்டீர்! இவள் தன்மையும் அவர்க்குரிய தன்மையே காண். இவளை வெவ்விய வெகுளியை விடுத்த சிறந்த துறவியின் மகள் என்று கூறல் வஞ்சகச் செயலே," என்று வற்புறுத்திக் கூறுவோரும் என்க.
 
(விளக்கம்) அறுவில் - அறல் இல்லாத. கயம் - நீர்நிலை. முனிந்து - தனக்குரிய நீர்நிலையை வெறுத்து என்றவாறு. நீரர மகள் - நீரில் வாழும் ஒருவகைத் தெய்வமகள். நீர்மையும் அது - இவள் பண்பும் அந் நீரர மகளிர் பண்பு என்க. வலித்து - வற்புறுத்து.