உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
17. விரிசிகை வதுவை |
|
கயத்துறு மகளெனிற்
கயலேர் கண்கள்
பெயர்த்தலு மருட்டி யிமைத்தலு முண்டோ 45
வான்றோய் பெரும்புகழ் வத்தவர்
பெருமகன் தேன்றோய்
நறுந்தார் திருவொடு
திளைத்தற் கான்ற கேள்வி
யருந்தவன்
மகளாய்த் தோன்றிய
தவத்த டுணிமினென் போரும்
|
|
(இதுவுமது)
43 - 48 :
கயத்துறு...................என்போரும்
|
|
(பொழிப்புரை) "நீரின்கண் உறைகின்ற நீரர மகளே இவள் என்றால், அந் நீரர மகளிர் தம்முடைய
கயல்மீன் போன்ற கண்களை அசைத்தலும் மருட்டி இமைத்தலும் உண்டாகுமோ? ஆதலின் இவள்
நீரர மகள் அல்லள். மற்று இவள் தான் யாரென்பீரேல் வானுலகத்திலும் பரவிய பெரும்
புகழையுடைய நம் மன்னனுடைய மார்பின்கண் உறைகின்ற தேன் தோய்ந்த நறிய மாலையாகிய
செல்வத்தோடு திளைத்தற்பொருட்டு நிரம்பிய நூற் கேள்வியினையுடைய அரிய தாபதன்
மகளாய்த் தோன்றுதற்கு உரிய நற்றவத்தை முற்பிறப்பிலே செய்தவள் ஒருத்தி கண்டீர்.
இதனைத் தெளிந்து கொள்ளுங்கோள் !"
|
|
(விளக்கம்) கயம் - நீர். ஏர் : உவம உருபு. மருட்டி -
மருளச் செய்து. நீரர மகளிர்க்குக் கண்கள் மருளலும் பெயர்தலும் இமைத்தலும் இல்லை;
இவள் கண்கள் அவையெலாம் உடையனவாதலின் இவள் நீரர மகள் அல்லள் என்றவாறு. திரு -
செல்வம். தோன்றுதற்குக் காரணமான முற்றவமுடையள் என்றவாறு. தங்கூற்றை வற்புறுத்துவார்
துணிமின் என்றார்.
|