பக்கம் எண் :

பக்கம் எண்:892

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
          ஈரிதழ்க் கோதை யியக்கி யிவளெனின்
          நேரடி யிவையோ நிலமுத றோய்வன
          அணியும் பார்வையு மொவ்வா மற்றிவள்
   60     மணியணி யானை மன்னருண் மன்னன்
          உதயண குமர னுறுதா ருறுகென
          நின்ற வருந்தவ நீக்கி நிதானமொடு
          குன்றச் சாரற் குறைவின் மாதவர்
          மகளாய் வந்த துகளறு சீர்த்தி
   65     நாறிருங் குழல்பிற கூறன்மி னென்மரும்
 
                    (இதுவுமது)
          57 - 65 : ஈரிதழ்............என்மரும்
 
(பொழிப்புரை) அது கேட்ட வேறுசிலர் "இவள் ஈரிய மலர் மாலையணிந்த இயக்கி ஆவள் என்று கூறுதல் பொருத்தமுடைத்தன்று. உதோ காண்மின்! இவளுடைய நேரிய அடிகள் நிலத்தின்மேல் தோய்கின்றன. அதுவேயுமன்றி இவள் அணிகலனும் பார்வையும் இயக்கி என்பதற்குப் பொருந்த மாட்டா. இவள் மணி கட்டப்பட்ட யானையையுடைய மன்னருள்ளும் சிறந்த மன்னனாகிய நம் உதயணகுமரன் அணிந்த மாலை தன் மார்பிற் படுக! என்று தான் நீண்டநாள் நிலையாக நின்று செய்த அரிய தவத்தை விடுத்து அமைதியோடு மலைச் சாரலின்கண் உறையும் குறைவற்ற தவத்தோர் மகளாய் வந்து பிறந்த குற்றமற்ற புகழையுடைய நறுமணங் கமழும் கூந்தலையுடைய மகளாவா ளொருத்தியே காண்மின் ! வேறு வேறாகக் கூறாதே கொண்மின்!" என்று கூறுவோரும் என்க.
 
(விளக்கம்) நேர் அடி - நேரிய அடி. நிலமுதல் - முதல் : ஏழனுருபு. இயக்கிக்கு இவ்வணியும் பார்வையும் இல்லை என்றவாறு. நிலைத்து நின்று செய்த அருந்தவம் என்க. நிதானம் - அமைதி. சீர்த்தி - மிகுபுகழ்.