உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
17. விரிசிகை வதுவை |
|
இமிழ்திரை
வையத் தேயர்
பெருமகன் தமிழியல்
வழக்கினன் றணப்புமிகப்
பெருக்கி நிலவரை
நிகர்ப்போ ரில்லா
மாதரைத் தலைவர
விருந்தது தகாதென் போரும்
|
|
(இதுவுமது)
66 - 69 :
இமிழ்.........என்போரும்
|
|
(பொழிப்புரை) "முழங்காநின்ற அலைகளையுடைய கடல் சூழ்ந்த நில உலகத்தின்கண் ஏயர் குலத்
தோன்றலாகிய நம் பெருமான் செந்தமிழ் நூல் அகப்பொருள் வழக்கின்கண் களவு கற்பு
என்னும் இருவகைக் கைகோளுள் வைத்துக் களவு வகையில் இவ்வுலகின்கண் தன்னை
ஒப்போரில்லாத அழகுடைய இவ்விரிசிகையை மணந்தவன், பின்பு அவளை அத் தமிழியல்
வழக்கின்படி வரைந்து கொள்ளானாய்த் தன் பிரிவுக் காலத்தை மிகவும் நீட்டி அப்
பெருமகளே தன்னைத் தேடித் தன்பால் வருந்துணையும் இருந்தது அத் தமிழியல் வழக்கிற்குப்
பொருந்தாது!" என்போரும் என்க.
|
|
(விளக்கம்) இமிழ் - முழக்கமுடைய. ஏயர் பெருமகன் : உதயணன்.
களவும் கற்பும் தமிழர்க்கே சிறந்துரிமை யுடைய ஒழுக்கங்கள். ஆகலின் தமிழியல்
வழக்கினன் என்றார். தணப்பு - பிரிவு. பிரிவுக் காலத்தைப் பெருக்கி என்க. மாதர் :
விரிசிகை. தலைவர - தன்பால் வர. தகாது என்றது அத் தமிழியல் வழக்கிற்குப்
பொருந்தாது என்றவாறு.
|