பக்கம் எண் :

பக்கம் எண்:894

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
           
    70       சொல்லியல் பெருமான் மெல்லிய றன்னைக்
             கண்டோர் விழையுங் கானத் தகவயின்
             உண்டாட் டமர்ந்தாங் குறையுங் காலைத்
             தனிமை தீர்த்த திருமக ளாதலின்
             இனிய னாதனன் றென்றுரைப் போரும்
 
                       (இதுவுமது)
         70 - 74 : சொல்லியல்..............உரைப்போரும்
 
(பொழிப்புரை) "புகழ் மிக்க நம் பெருமான் மெல்லியல்புடைய இந் நங்கை தான் காண்போர் பின்னும் காண்டற்கு விரும்பும் கானகத்தின்கண் உண்டாடுதலை விரும்பி அங்குச் சென்று உறையுங் காலத்தே தன்னுடைய தனிமைத் துயரத்தைத் தீர்த்துவிட்ட அழகி ஆகலின் அவன் இவளுக்கு இனிய காதலன் ஆதல் அறமேயாம்!" என்று பாராட்டுவோரும் என்க.
 
(விளக்கம்) மெல்லியல் - தான் உறையுங்காலை தனிமை தீர்த்தவள் ஆதலின் அவட்கு இனியனாதல் நன்று என்பது கருத்து. சொல் - புகழ். பெருமான் : உதயணன். மெல்லியல் : விரிசிகை. திருமகள் - அழகுடையோள்; திருமகள் போல்வாள் எனினுமாம். இனியன் என்பது இனிய காதலன் என்பதுபட நின்றது. நன்று என்பது நல்லறம் என்பதுபட நின்றது.