பக்கம் எண் :

பக்கம் எண்:895

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
           
   75     பவழமு முத்தும் பசும்பொன் மாசையும்
          திகழொளி தோன்றச் சித்திரித் தியற்றிய
          அணிகல மணிவோ ரணியி லோரே
          மறுப்பருங் காட்சி யிவள்போன் மாண்டதம்
          உறுப்பே யணிகல மாக வுடையோர்
   80     பொறுத்தன் மற்றுச்சில பொருந்தா தென்மரும்
 
                       (இதுவுமது)
           75 - 80 : பவழமும்...........என்மரும்
 
(பொழிப்புரை) வேறுசிலர், "பவழமும், முத்தும், பசிய மாசை என்னும் பொன்னுங் கொண்டு விளங்கும் ஒளி தோன்றும்படி சித்திரித்துச் செய்த அணிகலம் பலவும் அணிகின்ற பிற மகளிரெல்லாம் இவளை நோக்குழி அழகற்றவர் ஆகிவிடுவர். இவளைப் போல மறுத்தற்கரிய அழகினையுடைய மாண்புடைய தம் கண்முக முதலிய உறுப்புக்களே இயற்கை யணிகலனாகப் பெற்றோர், அவ்வுறுப்புக்களின் இயற்கையழகினை மறைக்கும் வேறு சில அணிகலங்களைச் சுமத்தல் வீணேயாம்" என்று அவ்விரிசிகையின் இயற்கையழகினைப் பெரிதும் பாராட்டுவோரும் என்க.
 
(விளக்கம்) பொன்மாசை : இரு பெயரொட்டு. அணியிலோர் - அழகில்லாதோர். காட்சி - அழகு. மற்றுச் சில பொறுத்தல் என மாறுக. சில - சிலவாகிய அணிகலம். இக் கருத்தோடு,

          "அமிழிமைத் துணைகள் கண்ணுக் கணியென வமைக்கு மாபோல்
   உமிழ்சுடர்க் கலன்க ணங்கை யுருவினை மறைப்ப தோரார்
   அமிழ்தினைச் சுவைசெய் தென்ன வழகினுக் கழகு செய்தார்
   இமிழ்திரைப் பரவை ஞால மேழைமை யுடைத்து மாதோ"
             (கம்ப. கோலங் - 3)
எனவரும் கம்பர் செய்யுளையும் நினைக