பக்கம் எண் :

பக்கம் எண்:898

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
          
    95     ஆய்பெருஞ் சிறப்பி னருந்தவர் பள்ளியுட்
           பாயற் கிடந்த பன்மலர் மிதிப்பினும்
           அரத்தங் கூருந் திருக்கிளர் சேவடி
           சின்மலர் மிதித்துச் சிவந்துமிகச் சலிப்ப
           மென்மெல வியலி வீதி போந்து
 
             (விரிசிகை அரண்மனையை அடைதல்)
                 95 - 99 : ஆய்.........போந்து
 
(பொழிப்புரை) பிறரால் ஆராயப் படுதற்குக் காரணமான பெரிய சிறப்பினையுடைய செயற்கருந் தவத்தினையுடைய துறவோர் பள்ளியுள் பாயல் போல் பரவிக் கிடக்கும் பலவாகிய மலர்களை மிதித்த விடத்தும் வருந்தி மிகவும் சிவக்கின்ற அழகு விளங்குகின்ற இயல்பாகவே சிவந்த அவ் விரிசிகை நல்லாளின் அடிகள் ஆங்கு வழியில் பரப்பி வைத்த மலர்களுள் சிற்சில மலர்களை மிதித்துப் பெரிதும் சிவந்து வருந்தும்படி மெல்ல மெல்ல நடந்து வீதியின்கண் வந்து என்க.
 
(விளக்கம்)   "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
   வேண்டும் பனுவற் றுணிவு"  (குறள் - 21)


என்பதனால் ஆய் பெருஞ் சிறப்பின் அருந்தவம் என்றார். பாயல் போலக் கிடந்த மலர் என்க. அரத்தம் - சிவப்பு. திரு - அழகு. சலிப்ப - வருந்த. இயலி - நடந்து.