பக்கம் எண் :

பக்கம் எண்:899

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
           
     100      கொடிபட நுடங்குங் கடிநகர் வாயில்
             முரசொடு சிறந்த பல்லியங் கறங்க
             அரச மங்கல மமைவர வேந்திப்
             பல்பூம் படாகை பரந்த நீழல்
             நல்லோர் தூஉ நறுநீர் நனைப்பச்
     105      சேனையு நகரமுஞ் சென்றுட னெதிர்கொள
             ஆனாச் சிறப்போ டகன்மனை புகுதலிற்
 
                     (இதுவுமது)
              100 - 106 : கொடி.........புகுதலின்
 
(பொழிப்புரை) உயர்த்திய கொடிகள் காற்றுப்படுதலாலே அசையாநின்ற அரண்மனை வாயிலின்கண், படைகளும் நகரப்பெருங்குடி மக்களும் மங்கல முரசத்தோடு இன்னிசையாற் சிறந்த பல்வேறு இசைக் கருவிகளும் முழங்காநிற்பவும், அரசர்க்குரிய மங்கலப் பொருள்கள் பலவும் பணிமகளிர் பொருத்தமாக ஏந்தி வாரா நிற்பவும் பல்வேறு பூங்கொடிகள் பரவிய நீழலினூடே மாதர்கள் தூவாநின்ற நறுமணப் பனிநீர் நனையாநிற்பவும், ஒருங்கு சென்று எதிர்கொள்ளாநிற்ப; இங்ஙனம் அவ் விரிசிகை நல்லாள் அமையாத பெருஞ்சிறப்போடு அகன்ற அரண்மனையின்கட் புகுதலாலே என்க.
 
(விளக்கம்) கொடி காற்றுப்பட நுடங்கும் என்க. கடிநகர் - அரண்மனை. பல்லியம் - பலவாகிய இன்னிசைக் கருவிகள். அரசமங்கலம் - அரசர்க்குரிய மங்கலப் பொருள்கள். அவை கவரி, நிறை குடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல் என்பன, இவற்றை,

  "சாமரை தீபம் தமனியப் பொற்குடம்
   காமர் கயலின் இணைமுதலாத்--தேமருவு
   கண்ணாடி தோட்டி கதலிகை வெண்முரசம்
   எண்ணிய மங்கலங்க ளெட்டு"

என்னுஞ் செய்யுளால் உணர்க. பூம்படாகை - பூங்கொடி. நல்லோர் : மகளிர். தூஉம் - தூவும். நறுநீர் - பனிநீர். நகரம் - நகரப் பெருங்குடி மாந்தர்.