பக்கம் எண் :

பக்கம் எண்:9

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
            இசைச்சன் கூறுவ னீங்கிது கேட்கென
           விச்சையின் முடியா விழுவினை யில்லெனல்
     60    பொய்ச்சொ லென்பர் புன்மை யோரே
           அற்ற தாத லிற்றுங் கூறுவென்
           கற்றதுங் கேட்டதுங் கண்ணா மாந்தர்க்
           கொற்கிடத் துதவு முறுவலி யாவது
           பொய்ப்பது போலு நம்முதற் றாகப்
     65    பற்றொடு பழகி யற்பழ லழுந்தி
           முடிவது நம்மைக் கடிவோ ரில்லை
 
               (இசைச்சன் கூற்று)
           58 - 66 : இசைச்சன்..,...... ..இல்லை
 
(பொழிப்புரை) இசைச்சன். என்னும் பார்ப்பனத் தோழன்
  ''எம்பெருமானே! அளியேன் கூறுமிதனைக் கேட்டருள்க.!'' என்று
  கூறுவான் -'வித்தையினாலே செய்து முடிக்கப்படாத சிறந்த
  செயல் யாதும் இல்லை' என்று சான்றோர் கூறுவதனைக் கல்லாத
  புல்லரே பொய்ச் சொல் என்று புறக்கணியா நிற்பர். அஃது
  அங்ஙனமாக; அளியேன் இன்னும் அச்சான்றோர் கூற்று மெய்ச்
  சொல் என்றே துணிந்து கூறா நிற்பேன். ''பெருமானே.! மாந்தர்
  கற்றதும் கேட்டதுமாகிய அறிவு அவர்க்கு இடையூறுற்றுழிக்
  கண்ணாக உதவுகின்ற மிக்க வலிமையுடைய காதல் நம்மிடத்தே
  மட்டும் பொய்யாகி விடும் போலும். நாம் கற்றதும் கேட்டதும்
  ஆகிய அறிவு இப்பொழுது இத் துயரத்தினின்றும் யாம் அகன்று
  உய்தற்கு வழி காட்டிற்றில்லையே! இல்லையாகவே நாம் பற்றுதற்குரிய
  பொருளோடு பெரிதும் பழகி அவற்றின் அழிவின்கண் அன்பு
  என்னும் நெருப்பிலே முழுகி இறந்தொழி வதனை நம்மைக் கடிந்து
  விலக்குவோருமிலர்'' என்க.          
 
(விளக்கம்) இசைச்சன் - உதயணனுடைய பார்ப்பனத்தோழன்.
  இவன்தான் பின்னர்க் கூறவிருக்கின்ற செய்திக்கு. ஆக்கமாகத் தோற்றுவாய்
  செய்கின்ற இம்மொழிகள் பெரிதும் இன்பம் தருதல் காண்க. இம்மொழிகள்
  அவன் சொல்வன்மைக்குக் கட்டியங்கூறி நிற்கின்றன.
    விச்சை - வித்தை - புன்மையோர் - கல்லாக்கயவர். மாந்தர் கற்றதும்
  கேட்டதும் ஒற்கிடத்துக்கண்ணாக உதவும் வலியென இயைக்க. உதயணன்
  தனக்குற்ற இடுக்கணைத் தனது கல்வி கேள்விகளானாய அறிவாற்
  கடவாமையைக், குறைகூறுவான் நம்வயிற் பொய்ப்பது போலும்.என்றான்;
  கேண்மையால்தான் அவன் என வேறாகாமல் ஒன்றுபட்டிருத்தலாலே.
  நின்னிடத்தே பொய்ப்பது போலும் எனக் கூறாமல் நம்வயிற் பொய்ப்பது
  போலும் என்று கூறுகின்ற நயம் நினைந்து நினைந்து இன்புறற்பாலது.
    துன்பத்தாலே அழுதழுது சாதல் எளியோர் செயலென்பான் நாம் அற்பழல்
  அழுந்தி முடிவதனைக் கடிவோரும் இல்லை என்றான். இக்கருத்தோடு,
  "அன்பினி னவலித் தாற்றா தழுவது மெளிது நங்கள்               
    என்பினி னாவி நீங்க விறுவது மெளிது சேர்ந்த                
    துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி   
    இன்பமென் றிருத்தல் போலு மரியதிவ் வுலகி லென்றான்".        
  எனவரும் (சீவக - 1392) திருத்தக்கதேவர் செம்மொழியும் நினைக.  
  ஒற்கிடம் - துன்பத்தாற்றளர்ச்சியுறுமிடம்,'கற்றதும் கேட்டதும் கண்ணாமாந்தர்க்கு
  ஒற்கிடத்துதவும் உறுவலியாவது? என்னுமிதன்கண் திருவள்ளுவனார் கருத்தோடு
  அவர்தம் சொல்லையும் பொன்போலப் போற்றி இப்புலவர் பெருமான் ஆளுதல்
  காண்க அத்திருக்குறள்.          
     ''கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
     கொற்கத்தி னூற்றாந் துணை .'       (குறள்- 414)
  என்பதாம்.