பக்கம் எண் :

பக்கம் எண்:903

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          விடைகொடுத் தவரைக் கொணர்மி னீரெனப்
          பொன்றிகழ் கோயில் புகுந்தனர் தொழுதொரு
          மந்திர வோலை மாபெருந் தேவிக்குத்
   110     தந்தனன் றனியே வென்றி வேந்தன்
          கோவே யருளிக் கொடுக்கென நீட்டலும்
 
             (தூதுவரை உதயணன் அழைத்துவரச் செய்தல்)
               107 - 111 : விடை............நீட்டலும்
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணமன்னன் அந்த வாயில் காவலர்க்கு விடைகொடுத்து நீவிர் சென்று அத்தூதுவரை அழைத்து வாருங்கோள் ! என்று கட்டளை இடுதலாலே அக்கட்டளை பெற்ற அத்தூதுவர் பொன்னாலியன்று விளங்காநின்ற அவ்வரண்மனையிற் புகுந்து அரசனை வணங்கி, "வேந்தே! எங்களரசன் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையாருக்குச் சிறப்பாக ஒரு திருமந்திர ஓலை எம்பால் வழங்கினன்" என்று கூறி "வேந்தே! இதனைத் தேவியின்பால் கொடுத்தருளுக" என்று அத்திருமந்திர ஓலையை உதயணனுக்குக் கொடாநிற்ப என்ப.
 
(விளக்கம்) அவரை - அத்தூதுவரை. கோயில் - அரண்மனை. மந்திர ஓலை - அரசர்கள் விடுக்கும் ஓலையைத் திருமந்திர ஓலை என்று வழங்குதல் மரபு. மாபெருந்தேவி என்றது வாசவதத்தையை. கோவே என்றது அத்தூதர் உதயணனை விளித்தபடியாம். வென்றி வேந்தன் - என்றது கோசலத்தரசனை.