பக்கம் எண் :

பக்கம் எண்:905

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          உதையண குமர னுவந்துண் டாடிச்
          சிதைவில் போகமொடு செங்கோ லோச்சி
          ஒழுகுங் காலை யோரிடத் தொருநாட்
          கழிபெருங் கேள்விக் கண்போன் மக்களொடு
     5    பேரத் தாணியுட் பொருந்தச் சென்றபின்
 
             (உதயணன் கொலு வீற்றிருத்தல்)
                1 - 5 : உதையணன்.........பின்
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணகுமரன் தேவிமாரொடு கூடி மகிழ்ந்து உண்டாடுதல் செய்து சிதைதலில்லாத இன்ப நுகர்ச்சியோடிருந்து உலகில் வாழும் இன்னுயிரோம்பிச் செங்கோலோச்சி ஒழுகுங் காலத்தே, ஓரிடத்தில் ஒரு நாள் மிக்க பெரிய நூற்கேள்வியை யுடையோரும் தனக்குக் கண்கள் போன்றவரும் ஆகிய அமைச்சர் முதலிய அரசவைச் சுற்றத்தார் சூழ அரசு வீற்றிருத்தற்குப் பேரத்தாணி மண்டபத்துள் சென்று அமர்ந்த பின்னர் என்க.
 
(விளக்கம்) போகம் - இன்பநுகர்ச்சி. ஓரிடத்து (3) வாணிக ரீண்டி (6) என இயைத்துக் கொள்க. கழிபெருங்கேள்வி : ஒரு பொருட்பன்மொழி, 'சூழ்வார் கண்ணாக வொழுகலான் மன்னவன்,
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்' (குறள். 445)
என்பது பற்றி அமைச்சர் முதலியோரைக் கண்போல் மக்கள் என்றார். பொருந்த - கொலு வீற்றிருத்தற்கு.