பக்கம் எண் :

பக்கம் எண்:906

உரை
 
5. நரவாண காண்டம்
 
   1. வயாக் கேட்டது
 
          வாரமி லொழுக்கின் வாணிக ரீண்டி
          முறையொடு சென்று முறைமையிற் பிழையாக்
          கரைதீர் செங்கோற் காவலற் கிசைத்து
          முறையிது கேட்கெனக் கேட்பது விரும்பி
     10    உருமண் ணுவாவினைப் பெருமகன் பணியா
          வினாவவன் னாற்கு வினாவெதிர் வழாமை
 
        (உதயணன்பால் வணிகர் வழக்குக் கொணர்தல்)
               6 - 11 : வாரம்.......வழாமை
 
(பொழிப்புரை) ஒருபாற் கோடாமல் நடுநிற்கும் நல்லொழுக்கத்தினையுடைய ஒருசில வாணிகர் கூடிவந்து அவ்வரசவையின்கண் ஒரு வழக்கொடு சென்று முறைமையில் பிழைத்தலில்லாத குற்றமற்ற செங்கோலையுடைய மன்னனுக்குத் தம் வருகையைக் கூறிப் 'பெருமான் எம் வழக்கினைக் கேட்டருளுக!' என்று வேண்டாநிற்ப, அதுகேட்ட மன்னவன் அதனைக் கேட்க விரும்பி உருமண்ணுவா என்னும் அமைச்சனை நோக்கி, 'நீ அதனை வினவுவாயாக!' என்று பணிப்ப அவனும் அவ்வழக்கினை வினவா நிற்ப, அவன் வினாக்களுக்கு விடையாக வழுவுதலின்றிக் கூறும் அவ்வணிகர் என்க.
 
(விளக்கம்) வாரம் - ஒருபாற் கோடல். ஈண்டி - கூடி. முறை - வழக்கு. கறை - குற்றம். காவலன் : உதயணன். முறையிது - இவ்வழக்கினை. பெருமகன் : உதயணன். பணியா - பணிப்ப. அன்னாற்கு - அவ்வுருமண்ணுவாவிற்கு. எதிர் - விடை.