பக்கம் எண் :

பக்கம் எண்:907

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
           மூவ ராவா ரொருமகற் கொருத்திகண்
           மேவரத் தோன்றிய மக்களம் மூவரும்
           ஆன்ற கேள்வியொ டறநெறி திரியார்
     15    மூன்றுதிறம் பட்ட விருப்பின ரவருள்
 
               (வணிகர் வழக்குரைத்தல்)
              12 - 15 : மூவர்.........விருப்பினர்
 
(பொழிப்புரை) பெருமானே! ஒரு தந்தைக்கும் ஒரு தாய்க்கும் விருப்பமுண்டாகப் பிறந்த மக்கள் மூவராவர். அம்மக்கள் மூவரும் நிரம்பிய கல்வி கேள்விகளையுடையராய் அறநெறியிற் பிறழாதவரும் ஆவர். மேலும் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தனித்தனியான விருப்பத்தையுமுடையராவர்' என்க.
 
(விளக்கம்) ஒரு மகற்கு - ஒரு தந்தைக்கு. ஒருத்திகண் - ஒரு தாய் வயிற்றில். மேவர - விருப்பமுண்டாக. மக்கள் மூவராவார் எனக் கூட்டுக. கேள்வி என்றமையால் கல்வியுங்கொள்க. மூன்றுதிறம் - மூன்று வகைப்பட்ட.