பக்கம் எண் :

பக்கம் எண்:908

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
         
     15    மூன்றுதிறம் பட்ட விருப்பின ரவருள்
           எறிதிரை முந்நீ ரூடுசென் றவ்வழி
           உறுவிலைப் பண்டத்தி னொருவன் வாழும்
           கடையகத் திருந்துதன் னுடையது பெருக்கிப்
           பிரிவிலன் வாழு மொருவ னொருவன்
     20    அரிய பண்ட மெளிதி னடக்கியவை
           உரிய காலத் துற்றது பகரும்
           இன்னவை மற்றவ ரியற்கை முன்னோன்
 
                   (இதுவுமது)
            15 - 22 : அவருள்..........இயற்கை
 
(பொழிப்புரை) "ஆதலால் அம் மூவருள் வைத்து ஒருவன் அலையெறிகின்ற கடலினூடு சென்று ஆங்குள்ள தீவுகளிற்றிரட்டிய மிக்க விலையினையுடைய பொன் மணி முதலியவற்றால் வாழ்பவன் ஆவன். இனி, இரண்டாமவன் நம் நகரத்திலேயே தனது அங்காடியின்கண் இருந்து தன்னுடைய வணிகத் தொழிலால் தன் பொருளைப் பெருக்கி நாட்டினின்றும் பிரியாதவனாய் வாழ்பவன் ஆவான். இனி மூன்றாமவனோ பிற நாட்டிற் சென்று பெறுதற்கரிய பொருள்களை எளிதாக ஈட்டிக் கொணர்ந்து தன் பண்டகசாலையின்கண் அடக்கிவைத்து அவையிற்றை விற்றற்குரிய காலத்தே விற்கும் வாழ்க்கையை மேற்கொண்டவனாவான். இம்மூன்றுவகை ஒழுக்கங்களும் நிரலே அம்மூவர்க்கும் தனித்தனி உரியன' என்க.
 
(விளக்கம்) ஒருவன் கடலில் கலத்திற் சென்று தீவகங்களில் பொன் மணி முதலியன ஈட்டிக் கொணர்ந்து வாழுபவன், மற்றொருவன் பிறந்த நகரிலேயே அங்காடிவைத்து வணிகம் செய்து வாழுபவன். மற்றொருவன் வேற்று நாட்டிற் சென்று ஆங்குள்ள பண்டங்களைக் கொணர்ந்து செவ்வி தேர்ந்து விற்றுப் பிழைப்பவன். இவ்வாறு இம்மூவரும் தனித்தனி ஒவ்வொருவகை விருப்பமுடையராய் இருந்தனர் என்றவாறு. எறிதிரை : வினைத் தொகை. முந்நீர் - கடல். உறுவிலை - மிக்க விலை. கடை - அங்காடி. தன்னுடையது - தன் கைப்பொருளை. பெருக்கி - வாணிகத்தால் பெருக்கி என்க. அரிய பண்டங்களை எளிதாக ஈட்டிப் பண்டகசாலையின்கண் அடக்கிவைத்து என்க. உரிய காலம் - ஊதியத்தோடு விற்றற்குரிய காலம். பகரும் - விற்பான்,