பக்கம் எண் :

பக்கம் எண்:910

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
           தவ்வையைச் சேர்ந்து கவ்விதின் மொழியச்
           சென்றது நின்றதுஞ் சிதைவின் றெண்ணி
           நன்றுசேய் வாழ்க்கை யென்றெடுத் திற்றென
     30    ஒன்று முரையா ளொருமைக் கோடலின்
           வென்றித் தானை வீர வேந்தநின்
           அடிநிழ லடைந்தன மதுவெங் குறையென
 
                     (இதுவுமது)
            27 - 32 : தவ்வையை.......குறையென
 
(பொழிப்புரை) "அவ்விருவரும் தம் தாயின்பாற் சென்று அழுகை யொலியோடு கூறாநிற்ப, அவள் அவன் சென்றதனையும் நகரின்கண் நின்ற நிலைமையினையும் ஒவ்வொன்றாக நினைந்து நினைந்து 'என் மகன் வாழ்க்கை நன்று ! நன்று !' என்று மனத்தினுள் வருந்தித் தன் வாயால் இஃது என்று யாதொன்றனையும் எடுத்துக் கூறாளாய் மௌனமுறாநிற்றலால், வென்றியையுடைய படையையுடைய வேந்தனே ! யாம் அவனுடைய பொருளை என் செய்வது என்பது தெளியாமல் அது தீர்தற் பொருட்டு நின்னுடைய திருவடி நீழலை எய்தினேம், அதுவே எங்கள் குறையாகும்,' என்று கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) தவ்வை - தாய். கவ்விதின் - அழுகையொலியொடு. அவன் சென்றதனையும் ஈண்டி எஞ்சிநின்ற பொருளையும். ஒருமைக் கோடல் - மௌனமுறல். வேந்த : விளி. குறை - செய்துதீரவேண்டிய இன்றியமையாச் செயல்.