(விளக்கம்) தீர்வு கூறுபவன் அவ்வணிகர் கேட்ப அரசனை நோக்கிக் கூறியபடியாம்.
உருமண்ணுவா பின்வருமாறு உரைத்தனன் என்க. வருக வப்பொருள் என்றது அப்பொருளை நங்கண்முன்
கொணருக என்றவாறு. அவ்வழி - நாம் கணித்துக் கண்டபின் என்பதுபட நின்றது. இருவரும் -
எஞ்சிய தம்பிமார் இருவரும். இலைச்சித்து - இலச்சினை பொறித்து. ஈரறுதிங்கள் -
ஓரியாண்டு. பொருள் வயிற்பிரிவு ஓரியாண்டை எல்லையாக உடையதாகலின் ஈரறுதிங்கள்
ஒருவன் கையகத்து இருக்க என்றான். அஃதாவது முன்னோன் கடலுள் மூழ்கி இறந்ததனை அவன்
மனைவி மெய்யென்று ஒப்புக் கொள்ளாமையால் அவள் ஐயத்திற்கேற்ப அவன் ஒரோவழி
உயிரோடிருப்பின் ஓரியாண்டிற்குள் மீண்டுவருவன் ஆதலின் அதுகாறும் பொறுத்திருந்து
பார்த்திடுக என்றவாறு.
'பொருள்வயிற் பிரிவும்
யாண்டின தகமே ஏனைப்
பிரிவும் அவ்வயின் நிலையும்' (தொ. கற்பி - 48 -
9)
எனவரும் நூற்பாக்களானும் உணர்க.
மிக்கோள்மாற்றம் மெய்யெனின் என்றது அவன்மனைவி தன்கணவன் இறந்திலன்,
அங்ஙனங் கூறுவது பொய் என்று கூறும் மொழி மெய்ம்மையாயின் என்றவாறு. இதனால் 40 - 41
ஆம் அடிகளில் அழிந்து போன சொற்கள் இக்கருத்துடைய அவள் கூற்றாதல் கூடும் என்று
ஊகிக்கலாம். மெய்யெனின் என்றது அவன் உயிருடன் இருந்து மீள்வானாயின் என்பது கருத்து.
மேலை இயல்பேயாகும் என்றது வரின் முன்பு போலவே அப்பொருள் அவனுக்குரிய தன்மையுடைத்து
என்றவாறு. அது - மெய்யென்றல். மறுவில் கொள்கைச் சிறுவன் என்றது தந்தைபொருள்
மைந்தற்குரியது என்னும் குற்றமற்ற கொள்கைக்குக் காரணமான சிறுவன் என்றவாறு. உறுபொருள்
- மிக்க பொருள். உரைக்கவும் - வழக்குரைக்கவும். பெறார் என்றது இடம்பெறார் என்பதுபட
நின்றது. புறநடை - புறமாகப் பெண்ணிற்குச் சுற்றத்தார் செய்யும் செயல்கள். அவை
உரைக்கிடையிற் காண்க. திறவதின் - பாக முறைப்படி. வழக்கு ஆனா அவர்
என்க.
|