பக்கம் எண் :

பக்கம் எண்:914

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
           கொற்றத் தேவியைக் குறுகலு மவளும்
     60    பொற்றொடித் தோழியர் புரிந்துபுறங் காப்பத்
           திருவொடு பூத்த நாள்வரை யிறந்தபின்
           பெருவிற னோன்பிகட்குப் பெலிக்கொடை யாற்றி
           ஆசிடைக் கிளவி யவரி னெய்தி
           மாசில் கற்பின் மங்கலக் கோலமொ
     65    டுருவமை மாடத் தோரிடத் திருந்தோள்
 
                (வாசவதத்தையின் செயல்)
             59 - 65 : அவளும்.................இருந்தோள்
 
(பொழிப்புரை) அத்தேவி தானும் பொன்வளையலணிந்த தன் தோழிமார் விரும்பிப் புறத்தே நின்று பாதுகாவா நிற்ப, மங்கலமுண்டாகத் தனக்குப் பூப்பு நிகழ்ந்த நாளின் எல்லை கழிந்த பின்னர்த் திருமுழுக்காடிப் பெரிய வெற்றியையுடைய துறவிகளுக்கு உணவு முதலிய பலிகளை வழங்கி அத்துறவோரால் வாழ்த்துப் பெற்றுக் குற்றமற்ற கற்பினுக்குரிய மங்கலக் கோலத்தோடு அழகமைந்த தனது உவளக மாடத்தின் கண்ணே ஓரிடத்தில் அமர்ந்திருந்தவள் என்க.
 
(விளக்கம்) அவளும் - அவ்வாசவதத்தை தானும். புரிந்து - விரும்பி. ஏனைய பூப்புப் போல வறிய பூப்பாகாது நன்மகப் பேற்றிற்கு இப்பூப்புக் காரணமாதலைக் குறிப்பாலுணர்த்துவார், திருவொடு பூத்த என்றார். திரு - ஈண்டுப் பூப்பின் பயனாகிய மகப்பேற்றினைக் குறித்து நின்றது. தம்பொருள் என்ப தம்மக்கள் என்பது பற்றி அதனைத் திரு என்றார். பூத்த நாள்வரை என்றது பூப்பு நிகழ்ந்த நாள் முதல் கூட்டத்திற்கு மறுக்கப்பட்ட நாளின் எல்லை என்றவாறு. அஃதாவது பூப்புப்புறப்பட்ட மூன்று நாளும் என்றவாறு. இதனைப்

         'பூப்பின் புறப்பா டீராறு நாளும்
         நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்
         பரத்தையிற் பிரிந்த காலை யான'  (தொல். கற். 46)

எனவரும் தொல்காப்பிய நூற்பாவிற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் 'பூப்புப் புறப்பட்ட ஞான்றும் மற்றை நாளும் கருத்தங்கில் அது வயிற்றில் அழிதலும், மூன்றா நாள் தங்கில் அது சில்வாழ்க்கைத்தாகலும் பற்றி முந்நாளும் கூட்டமின்றென்றார்' என்று வகுத்த விளக்க உரையானும் உணர்க. பெருவிறல் - பெரிய வெற்றி. நோன்பிகள் - துறவிகள். ஆசிடைக்கிளவி - வாழ்த்து மொழி.