பக்கம் எண் :

பக்கம் எண்:918

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
         
     80    யாரவன் கூறென வவ்வழி யிறைஞ்சிப்
           பேரவ ளுரைத்தலிற் பெருமக னோக்கித்
           துன்பமு மின்பமுந் துறக்க லாற்றா
           மன்பெருந் தேவியொடு செலவுள மமர்தலின்
           மற்றதை யுணர்த்தி முற்றிழை யெழுகெனப்
     85    பற்றுந ளுடனே பறந்துவிசும் பிவர
           மேலுங் கீழு மேவர நோக்கி
           மாசறு மகளிர் மம்ம ரெய்தி
           ஆனாக் கனவிடை மாநிதிக் கிழவன்
           விளங்கவை நாப்பட் டுளங்கினர் புகுதலின்
 
                    (இதுவுமது)
              80 - 89 : யார்........புகுதலின்
 
(பொழிப்புரை) அதுகேட்ட அவ்வுதயணன் 'உன் இறைவன் என்பவன் யார்? எனக்குக் கூறுக!' என்று அவளை வினவலும் அது கேட்ட அவள் உதயணனை வணங்கி அவள் இறைவன் பெயரினைக் கூறுதலாலே, அம் மன்னன் அவளைக் குறிப்பால் நோக்கித் துன்பக்காலத்தும் இன்பக்காலத்தும் தன்னைப் பிரிந்திருத்தல் ஆற்றாத கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையோடு செல்லத் தன் மனத்தே விரும்புதலால் அக்கருத்தினை உணர்ந்து கொண்ட அக் கனாமகள் அதனை வாசவதத்தைக்கு அறிவித்து 'முற்றிழாய் ! நீயும் எழுக !' என்று இருவரையும் இரு கைகளினும் எடுத்துக்கொண்டு வான்வழியாக அப்பொழுதே பறந்து செல்லா நிற்ப, அப்பொழுது குற்றமற்ற அவ் வாசவதத்தை நல்லாள் மேலும் கீழும் விருப்பமுண்டாக நோக்கி நோக்கி மயங்கா நிற்ப, அவ்வுதயணன் இடையறவின்றிக் காணும் அக்கனவினூடே பின்னருங் காண்பவன் மிக்க நிதியையுடைய குபேரனுடைய விளக்கமுடைய அவை நடுவே நடுங்கிப் புகா நிற்றலால் என்க.
 
(விளக்கம்) அவன் - எம் இறை என்று கூறிய அவன். இறைஞ்சி - வணங்கி. பேர் - பெயர். பெருமகன் : உதயணன். மன்பெருந்தேவி : வாசவதத்தை. மற்றதை - அவன் விரும்புவதை. முற்றிழை : வாசவதத்தை; விளி. இவர - செல்ல. மேவர - விரும்புதல் வர. மகளிர் : வாசவதத்தை. மம்மர் - மயக்கம். ஆனாக் கனவு - இடையறாக் கனவு. நாப்பண் - நடுவே.