பக்கம் எண் :

பக்கம் எண்:919

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
         
     90    அரிமா சுமந்த வமளி காட்டத்
           திருமா ணாகத்துத் தேவியொ டேறி
           இருந்த பொழுதிற் பொருந்திய வல்லியுள்
           வெள்ளேறு கிடந்த வெண்டா மரைப்பூக்
           கொள்வழி யெழுதிய கொடுஞ்சி யுடைத்தேர்ப்
     95    பொன்னிய றொடரிற் புதல்வ னிருத்தலிற்
 
                     (இதுவுமது)
             90 - 95 : அரிமா.........இருத்தலின்
 
(பொழிப்புரை) அவள் வருகை கண்ட அம் மாநிதிக்கிழவன் தன் பாங்கர் அவ்விருவர்க்குஞ் சிங்கம் சுமந்த இருக்கையைக் காட்டா நிற்ப, உதயணன் திருமகளை ஒப்பான மெய்யினையுடைய வாசவதத்தையோடு ஏறி வீற்றிருந்த பொழுதில் தன் அகவிதழின்கண் வெள்ளை விடையொன்று கிடந்த வெண்டாமரைப் பூவினை அக் குபேரன் வழங்க அதனை ஏற்றுக் கொள்ளுமிடத்து அதனூடே எழுதப்பட்ட கொடிஞ்சியையுடைய தேரினது பொன்னாலியன்ற சங்கிலியின்மேல் ஒரு மகவு இருத்தல் கண்டு என்க.
 
(விளக்கம்) இவையெல்லாம் கனா நிகழ்ச்சிகள் என்க. அரிமா - சிங்கம். அமளி - இருக்கை. ஆகம் - உடல். அல்லி - அகவிதழ். வெள்ளேறு - வெள்ளைக் காளை. கொடிஞ்சி - ஒருவகைத் தேருறுப்பு. தொடர் - சங்கிலி.