பக்கம் எண் :

பக்கம் எண்:922

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          கழிந்த கங்குற் கனவினை வியந்து
          நூனெறி மரபின் வல்லோற் பேணிக்
          கோலத் தேவியொடு கோமகன் வினவக்
          கனவது விழுப்ப மனவயி னாய்ந்து
    115    விளங்கொளி விஞ்சையர் வெள்ளியம் பெருமலைத்
          துளங்கா வாழி தோன்ற வேந்தும்
          வெய்யோற் பெறுதலும் விறலவ னெய்தலும்
          ஐய மில்லையென் றாய்ந்தவ னுரைப்பப்
          புதல்வனஃ தெதிர்மை பொருளென விரும்பித்
    120    திதலை யல்குற் றேவியொடு மகிழ்ந்து
          செல்லா நின்ற சின்னா ளெல்லையுட்
 
            (உதயணன் கனாப்பயன் அறிதல்)
             111 - 121 : கழிந்த........எல்லையுள்
 
(பொழிப்புரை) கழிந்த இரவினில் தான் கண்ட கனவினை அவ்வுதயணன் மீட்டும் நினைவிற் கொணர்ந்து வியந்து கனா நூல் வழி முறைமையால் பயன் கூறவல்ல ஒரு முனிவர்பால் அழகிய தன் தேவியோடு சென்று அக் கனவின் பயனை வினவாநிற்ப, அத் துறவி அக் கனவினைக் கேட்டு அதன் சிறப்பினைத் தன் நெஞ்சத்துள் ஆராய்ந்து, ''வேந்தே! ஒளியினால் விளங்கும் விச்சாதரர் உலகாகிய வெள்ளிமலைமீது நடுங்காத ஆணைச்சக்கரம் உலகெலாந் தோன்றும்படி ஏந்தாநின்ற நின்னால் விரும்பத்தக்க மகன் ஒருவனை அண்மையில் நீ பெறுதலும், அம்மகன் விச்சாதரருலகினை வெல்லுதலும் ஐயமில்லை'' என்று ஆராய்ந்த அம்முனிவன் கூறாநிற்ப, அதுகேட்ட வேந்தன் இப்பொழுது மகப்பேறே யாம் விரும்பும் பொருளென அப் பேச்சினை விரும்பித் தேமல் படர்ந்த அல்குலினையுடைய வாசவதத்தையோடு கூடிக்குலாவி மகிழ்ந்து செல்கின்ற ஒருசில நாள்களுள் என்க.
 
(விளக்கம்) நூல் - கனா நூல். கோமகன் : உதயணன். ஆழி - ஆணைச் சக்கரம். வெய்யோன் - விரும்புதற்குக் காரணமான மகன். விறல் - வெற்றி. எதிர்மை - வருந்தன்மை. பொருள் - விரும்பும் பொருள். திதலை - தேமல்.