உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
முயக்கமை
வில்லா நயப்புறு புணர்ச்சியுள்
அணிநிற வனிச்சம் பிணியவிழ்ந்
தலர்ந்த 135 அந்த ணறுமல
ரயர்ப்பிற் றாங்கும்
செந்தளிர்...........................வருந்த
வசாஅய் நிலாவுறழ்
பூந்துகின் ஞெகிழ்ந்திடைத் தோன்றக்
கலாவப் பல்காழ் கச்சுவிரிந்
திலங்கத் திருநுதற்
றிலகமுஞ் சுமத்த லாற்றாள்
|
|
(இதுவுமது) 133
- 139 : முயக்கு............ஆற்றாள்
|
|
(பொழிப்புரை) தழுவுதல்
ஒழிதலில்லாத விருப்பமுறுதற்குக் காரணமான புணர்ச்சியினிடத்து அழகிய நிறமுடைய
அனிச்சத்தினது கட்டவிழ்ந்து மலர்ந்த அழகிய குளிர்ந்த நறிய மலரினது குழைவுபோலே அக்
கருப்பொறையைத் தாங்கும் சிவந்த தளிர் ............வருந்தும்படி வருந்தி
நிலவினையொத்த வெண்பூந்துகில் நெகிழ்ந்து இடைதோன்றா நிற்பக் கலாவமாகிய பல
கோவையையுடைய மேகலை விரிந்து விளங்காநிற்பத் தனது அழகிய நெற்றியிலிட்ட
திலகத்தைத் தானும் சுமக்கவியலாதவளாய் என்க.
|
|
(விளக்கம்) இப்பகுதியில் 136ஆம் அடியில் சில சொற்கள் அழிந்தன. அவை
அடிகள் என்னும் பொருளுடையன போலும். அயர்ப்பில் - குழைதல்போல. முன்பு உண்டோ
இல்லையோ என்று ஐயுறும்படி நுண்ணிதாயிருந்த இடை இப்பொழுது தோன்றிற்று என்பது கருத்து.
கலாவம் - ஒருவகை மேகலை. திலகம் - பொட்டு. 'பொட்டணி யானுதல் போய்இறும் பொய்போ
லிடையென' எனவரும் கோவையாரும் காண்க (303).
|