பக்கம் எண் :

பக்கம் எண்:926

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
         
    140    பெருமதர் மழைக்க ணின்றுயில் பேணிய
          இன்ப யாம மியைந்த வைகறை
          நன்பெருங் கனவி னடுங்குவன ளேற்று
          வெள்ளத் தானை வியலக வேந்தன்
          பள்ளி யேற்றபின் பதனறிந்து வணங்கி
    145    என்னைகொ லடிக ளின்றியான் கண்டது
          விண்ணக மருங்கில் வெண்முகில் புரைவதோர்
          அண்ணல் யானையென் கண்ணுற வந்துதன்
          ஆய்வலித் தடக்கை சுருட்டுபு முறுக்கியென்
          வாய்புக் கடங்கிய பொழுதிற் சேய்நின்
 
        (வாசவதத்தை ஒரு கனவு கண்டு அரசனுக்குரைத்தல்)
               140 - 149 : பெருமதர்..........பொழுதின்
 
(பொழிப்புரை) பெரிய மதர்ப்புடைய குளிர்ந்த கண்ணையுடைய அவ்வாசவதத்தை நல்லாள் ஒரு நாள் இரவின்கண் இனிய துயில்கூடி இருந்த இன்பமிக்க யாமமாகிய வைகறைப் பொழுதின்கண் தனக்குண்டாகிய நல்லதொரு கனவினைக் கண்டு அக்கனவு நிகழ்ச்சியால் அஞ்சி மெய்ந் நடுங்கி விழிப்புற்றுக் கிடந்தவள் மிக்க படையையும் அகன்ற நாட்டையுமுடைய உதயண வேந்தன் துயிலெழுந்தபின் செவ்வியறிந்து அவனை வணங்கி, ''அடிகேள்! இன்று யான் கண்ட கனவின் பயன் என் கொலோ? விசும்பின்கண் வெண்மேகத்தையொத்த ஓரியானை என் கண்முன் தோன்றித் தனது அழகிய வலிய பெரிய கையைச் சுருட்டி முருக்கிக்கொண்டு என் வாயினுட் புகுந்து வயிற்றினுள் அடங்கிய பொழுதில்'' என்க.
 
(விளக்கம்) வைகறையாமத்தே கண்ட கனவின் பயன் எட்டு நாளிற்குள் உண்டாகும் என்பது கனாநூற்றுணிவு. வெள்ளம் - ஒரு பேரெண். வேந்தன் : உதயணன். பள்ளியேற்றல் - துயிலெழுதல். பதன் - செவ்வி. அடிகள் : விளி. புரைவதோர் - ஒப்பதோர். ஆய் - அழகு. சுருட்டுபு - சுருட்டி.