பக்கம் எண் :

பக்கம் எண்:927

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          வாய்புக் கடங்கிய பொழுதிற் சேய்நின்
    150    றந்தர மருங்கிற் றுந்துபி கறங்கப்
          புகழ்ந்துபல ரேத்தப் பொருக்கெனப் பெயர்த்தே
          உமிழ்ந்தனெ னுமிழப் பரந்திற்கு தோற்றிப்
          பல்லோர் மருளப் பறந்துசென் றுயர்ந்ததோர்
          வெண்மலை மீமிசை யேறி வேட்கையின்
    155    விண்மிசை ஞாயிறு விழுங்கக் கண்டனென்
          என்னைகொ லிதனது பயமென வினவிய
          நன்னுதல் கேட்ப மன்னவ னுரைக்கும்
 
                  (இதுவுமது)
          149 - 157 : சேய்நின்..........உரைக்கும்
 
(பொழிப்புரை) "வானின்கண் சேய்மையில் நின்று துந்துபி முழங்காநிற்பவும், விண்ணோர் பலர் வாழ்த்தாநிற்பவும் யான் ஞெரேலென்று அந்த யானையை உமிழ்ந்தேன்; உமிழவே அது தானும் இறக்கைகளைப் பரக்கத் தோற்றுவித்துக் கொண்டு கண்டோர் பலரும் வியக்கும்படி பறந்துபோய் ஏனை மலைகளினுங் காட்டில் உயர்ந்த ஒரு வெண்மலை யுச்சியின்மேல் ஏறி விருப்பத்தோடே வானின்கண் இயங்கும் ஞாயிற்றுமண்டிலத்தை விழுங்கக் கண்டேன். அடிகேள்! அக்கனவின் பயன் தான் என்னையோ? கூறுக' என்று வினவினள், அங்ஙனம் வினவிய நல்ல நெற்றியையுடைய அத்தேவி கேட்கும்படி உதயணமன்னன் கூறுவான் என்க.
 
(விளக்கம்) சேய் - தொலை. துந்துபி - தேவர்களுடைய ஒருவகை இசைக்கருவி. பலர் - விண்ணோர் பலரும். பரந்து - பரவ. மருள - வியக்க. இதனது - இக்கனவினது. நன்னுதல் : வாசவதத்தை. மன்னவன் : உதயணன்.