உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
மறுவின்று
விளங்கு மறப்போ
ராற்றலோர் சிறுவனைப்
பெறுதி சேயிழை மற்றவன் 160 உறுதிரைப்
பக்கமும் வானமும்
போகி அச்சமி
லாற்றலோர் விச்சா தரரிடை
ஆழி யுருட்டுமென் றறிந்தோ
ருரைத்த வீழா
விழுப்பொருண் மெய்பெறக் கண்டனை
தீதின் றாகித் திருவொடு புணர்கென
165 மாதாங்கு குருசிலு மதுவே
யிறுப்பப் போதேர்
கண்ணியும் புகன்றன ளொழுக
|
|
(கனவின்
பயனை உதயணன்
கூறல்) 158 -
166 : மறுவின்று..............ஒழுக
|
|
(பொழிப்புரை) "சேயிழாய் ! ''நீ இப்பொழுது குற்றமின்றி
விளங்காநின்ற மறப் பண்புமிக்க போராற்றலையுடைய ஒரு மகனைப் பெறுவாய்காண் ! அவன்
தானும் கடல் சூழ்ந்த திசைகளிடத்தும் வானத்தினும் சென்று அச்சமில்லாத
ஆற்றலையுடையோரான விச்சாதரர் மன்னர்களிடையே ஆணைச் சக்கரம் உருட்டுவான்'', என்று
கனாநூலுணர்ந்த அத்துறவியார் நமக்கு முன்பு கூறிய பொய்யாத சிறந்த பொருள்
உண்மையாதற்குரிய நற்கனவினையே கண்டனை. நங்காய் ! நீ தீங்ககன்று திருவோடு புணர்க
!' என்று வாழ்த்தி யானை குதிரை முதலியவற்றை ஏறித் தகைத்து நிறுத்தும் தலைவனாகிய
அவ்வுதயணன்றானும் முன்னர் அம்முனிவன் தமக்குக் கூறிய பொருளையே கூறுதலாலே மலர் போலும்
கண்ணையுடைய அத்தேவிதானும் அக்கனாப்பயனைப் பெரிதும் விரும்பியவளாய் ஒழுகி வாராநிற்ப
என்க.
|
|
(விளக்கம்) மறு - குற்றம். சேயிழை : விளி. உறுதிரை - பேரலையையுடைய கடல்.
பக்கம் - திசை. ஆழி - ஆணைச்சக்கரம். அறிந்தோர் என்றது முன்பு கனாப்பயன் கூறிய
துறவோனை. விழுப்பொருள் - சிறந்த பொருள். 'தீதின்றாகித் திருவொடு புணர்க' என்பது
ஒருவகை வாழ்த்து. கனாக்கண்டு கூறுவோரைக் கேட்போர் வாழ்த்துதல் மரபு. மா - யானையும்
குதிரையும். குருசில் : உதயணன். அதுவே - அம்முனிவன் கூறியதனையே. கண்ணி : வாசவதத்தை.
புகன்றனள் - விரும்பியவளாய்.
|