பக்கம் எண் :

பக்கம் எண்:929

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          மங்குல் விசும்பின் வளர்பிறை போலவும்
          பொங்குநீர்ப் பொய்கையிற் பூவே போலவும்
          நாளினு நாளினு நந்திவனப் பெய்தித்
    170    தோளுந் தாளு முடம்புந் தலையும்
          உகிரு மயிரு மொருங்குகுறை வின்றி
          ஓதிய வனப்போ டுயர்நெறி முற்றி
          அருவினை விச்சை யவனூ டுறைதலிற்
          பெருமலை யுலகம் பேணு மவாவொடு
    175    பறத்த லூற்றம் பிறப்பப் பைம்பூட்
          சிறப்பொடு புணர்ந்த சேயிழை மாதர்
          குடர்வயிற் கிடந்த குழவிய துள்ளத்
          திடர்வகை யறியா ளெவ்வ மெய்தி
 
         (வாசவதத்தையின் கருப்பம் வளர்தல்)
           167 - 178 : மங்குல்....................எய்தி
 
(பொழிப்புரை) முகிலையுடைய வானத்தின்கண் வளர்பிறை வளர்வது போலவும், மிக்க நீரையுடைய பொய்கையின்கண் மலர் வளர்வது போலவும் நாள்தோறும் வளர்ந்து அழகெய்திக் கையும் காலும் உடம்பும் தலையும் நகமும் மயிரும் ஆகிய உறுப்புக்கள் எல்லாம் சிறிதும் குறைவின்றி அவற்றிற்கு ஓதப்பட்ட அழகோடு உயர்ந்த வகையால் முதிர்ந்து அம்மகன் நெஞ்சத்தினூடே அரிய வினைகளைச் செய்தற்குக் காரணமான வித்தை தங்கி இருத்தலாலே பெரிய மலையினையுடைய விச்சாதரர் உலகத்தை ஆளுதற்குக் காரணமான அவாவோடு பறத்தற்குக் காரணமான ஊக்கமும் தோன்றுதலாலே பசிய அணிகலங்களின் அழகோடு கூடிய சிவந்த அணிகலனணிந்த அத்தேவி தன் வயிற்றின்கண் உருவாகிக்கிடந்த அக்குழந்தையினது இயக்கத்தால் உண்டாகும் துன்பமே இத்துன்பம் என்று அறியாதவளாய்ப் பெரிதும் துன்பத்தை அடைந்து என்க.
 
(விளக்கம்) எவ்வம் - துன்பம். குழவியது எண்ணத்தால் இங்ஙனம் நிகழ்கின்றது என்று அறியாதவளாய்த் துன்பமடைந்து என்க. மங்குல் - முகில். நாளினும் நாளினும் - நாள்தோறும். நந்தி - வளர்ந்து. உகிர் - நகம். ஒதியவனப்பு - உறுப்புக்களுக்கு நூலின்கண் கூறப்பட்ட இலக்கணம், மலையுலகம் - விச்சாதரர் உலகம். ஊற்றம் - ஊக்கம்.