பக்கம் எண் :

பக்கம் எண்:930

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          உணர்ந்தோ ருரைப்ப வுரையிற் கேட்கும்
    180    இருவகை யிமயமும் பெருகுபுனல் யாறும்
          நீலப் பருப்பமுந் தீபமு மப்பாற்
          கோல வருவியஞ் சிகரியு ஞாலத்
          தொருநடு வாகிய வுயர்பெருங் குன்றமும்
          பெருமலை பிறவு மருமையொடு புணர்ந்த
 
          (வாசவதத்தைக்கு உண்டான விருப்பம்)
           179 - 184 : உணர்ந்தோர்............பிறவும்
 
(பொழிப்புரை) உலகப் பொருள்களை ஆராய்ந்துணர்ந்த பெரியோர் கூறும் மொழிகளின் வாயிலாய்க் கேட்கப்படும் இருவேறு வகைப்பட்ட இமயமலையும் நீர் பெருகிவரும் யாறுகளும் நீலமலையும் தீவங்களும் அப்பாலுள்ள அழகிய அருவியையுடைய அழகிய குவடுகளும் இப்பேருலகத்திற்கு ஒப்பற்ற நடுவாகி நின்று உயர்ந்த பெரிய மந்தரமும் பெரிய மலையும் இன்னோரன்ன பிறவும் என்க.
 
(விளக்கம்) இருவகை இமயம் - நிலஉலகத்ததாயும் வானவர் உறைவதாயும் இருவேறுவகைப்பட்ட இமயமலை என்க. யாறு - கங்கை முதலியன. பருப்பம் - பருப்பதம்; மலை. தீபம் - தீவு. சிகரி - சிகரம். நடுவாகிய குன்றம் - மேரு.