பக்கம் எண் :

பக்கம் எண்:933

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
           வளம்பாற் றன்மையின் வந்துபுடை யடுத்த
           இளம்பாற் கெதிர்ந்த விடத்த வாகிய
    200    முலைபொறை யாற்றா முனிவின் றலையும்
           மலைபொறுத் தென்ன மகனையுந் தாங்கி
           நொந்துபுற மெலிந்த தன்றியு மந்தரத்
           தியங்கல் வேட்கைய னிருக்குந னாதலின்
           அயங்கவ னழற்ற வசைவு முந்துறீஇ
 
                   (இதுவுமது)
           198 - 204 : வளம்............முந்துறீஇ
 
(பொழிப்புரை) உடம்பினின்றும் வந்து தம்பாற் சுரந்த வளவிய இளம்பால் பாறுதல் இல்லாமையின் அதனை ஏற்றற் பொருட்டு விரிந்த இடத்தை உடையனவாகிய தன் முலைச் சுமையையே சுமத்தலாற்றாத வெறுப்பின் மேலும், மலையொன்றனைச் சுமப்பதுபோலத் தன் வயிற்றினுள் மகனையும் சுமந்து நொந்து உடல் மெலிந்ததோடல்லாமல் கருவிலிருக்கும் அம்மகன்றானும் வானத்தின்கண் இயங்கும் வேட்கையை யுடையன் ஆதலால் அவ்வேட்கை காரணமாக அம்மகவு, தான் வருந்தும்படி அசைதலாலே தானும் அசைதலை மேற்கொண்டு என்க.
 
(விளக்கம்) வளம் இளம்பால் என்க. எதிர்ந்த இடம் - எதிர்தற்பொருட்டு உண்டாய இடம். பாற்று அன்மையின் - பாறுதல் இல்லாமையின். அஃதாவது சிந்துதல் இல்லாமையின் என்றவாறு. முனிவின்றலையும் - வெறுப்பின்மேலும். புறம் - உடம்பு; ஆகுபெயர். அந்தரம் - வானம். கருவிலிருக்கும் மகன் வானத்தில் இயங்கும் விருப்பம் உடையனாகலின் அவ்விருப்பங் காரணமாக அவன் கருப்பையுள்ளும் இயங்குவானாக, அஃதாற்றாது தானும் உடலசைந்து வருந்தினாளென்பது கருத்து. அவன் - அம்மகவு. அயங்குதல் - அசைதல்.