பக்கம் எண் :

பக்கம் எண்:934

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
         
    205   முக்கூட் டரத்த வொண்பசை விலங்கி
          நெய்க்கூட் டிலங்கு நித்தில நிகர்த்துக்
          கூரிய வாகிய நேரியன் முறுவற்
          செவ்வாய் திறந்து சில்லென மிழற்ற
          ஐதேந் தல்குலு மாகமு மசைஇ
    210    மைதோய் கண்ணி மதியின் மெலியப்
 
                   (இதுவுமது)
           205 - 210 : முக்கூட்..........மெலியப்
 
(பொழிப்புரை) வெற்றிலை பாக்குச் சுண்ணாம்பு என்னும் இம் முப் பொருளின் கூட்டத்தால் உண்டாகும் சிவந்த ஒள்ளிய பசை தவிர்ந்து நெய் தடவியதனால் விளங்காநின்ற முத்துக்களைப் போன்று கூர்மையுடையனவாகிய நேரிய வரிசையையுடைய பற்களையுடைய தனது சிவந்த வாயைத் திறந்து ஆற்றாமையால் சில மொழிகள் மட்டுமே மொழியாநிற்பவும், அழகிதாய் உயர்ந்த அல்குலும் மெய்யும் வருந்தி மையூட்டப்பெற்ற கண்களையுடைய அக் கோப்பெருந்தேவி நிறைமதிபோல வெளிறி மெலியாநிற்ப என்க.
 
(விளக்கம்) முக்கூட்டரத்தம் - வெற்றிலை முதலிய மூன்றும் கூட்டுதலால் உண்டாகும் செம்மை நிறம். தம்பலந் தின்னாமையின் பற்களில் செந்நிறம் விலகிப் போயிற்று என்பது கருத்து. நித்திலம் - முத்து. நேரியல் - ஒழுங்குபட்ட. ஆகம் - உடம்பு. கண்ணி : வாசவதத்தை. மதிபோல வெளிறி - உடல் மெலிய என்க.