பக்கம் எண் :

பக்கம் எண்:935

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          பசைவுறு காதற் பட்டத் தேவி
          அசைவுறு வெந்நோ யறிந்த வரசன்
          அசாஅ வரும்பொருள் யாதென வுசாஅய்க்
          கேட்பவஃ துரையாள் வேட்பது விளம்பின்
    215    நயந்தோர்க் காயினு நாணுத்தக் கன்றென
          உயர்ந்தோர் கொள்கையி னொண்டொடி யொதுங்க
          மன்னவன் மறுத்து மடவோய் மற்று
          .......................................................
          நின்னுயிர் மதியா யாயி னென்னுயிர்
          யானும் வேண்டே னாயிழை கேண்மோ
 
        (உதயணன் வாசவதத்தையின் விருப்பத்தை வினாதல்)
                211 - 219 : பசைவுறு.............கேண்மோ
 
(பொழிப்புரை) அன்புறும் காதல்மிக்க தன் பட்டத்தேவி இங்ஙனம் வருந்துதற்குக் காரணமான வெவ்விய வயாநோயை அறிந்த அரசன் சிந்தித்து அவளை ''நீ விரும்புகின்ற அரும் பொருள் யாது?'' என்று வினவா நிற்ப; அதனை ஒள்ளிய தொடியினையுடைய அத்தேவி கூறாளாய், ''வேந்தே ! யான் விரும்புவதனை வெளியிட்டுக் கூறின் அஃது என்னை விரும்புவோர்க்கும் நாணும் தகுதியையுடைத்தாம்'' என்று கூறிச் சான்றோர்க்குரிய அமைதியோடே ஒதுங்கிப் போகாநிற்ப அது கண்ட மன்னவன் அவள் கூற்றை மறுத்து, ''மடந்தாய்! மற்று ...............நீ நினது உயிரை நன்கு மதித்துப் பேணாயாயின் யானும் என் உயிரை விரும்பிப் பேணுவேனல்லேன் ! ஆயிழாய் நான் கூறும் இதனைக் கேட்பாயாக'' என்க.
 
(விளக்கம்) பசைவு - அன்பு. பட்டத்தேவி : வாசவதத்தை. அசாஅ - விரும்புகிற. உசாஅய் - சிந்தித்து. அது - தான் விரும்புவதனை நாணுத் தக்கன்று - நாணத்தக்கது. உயர்ந்தோர் கொள்கை - என்றது அமைதியோடிருக்குங் கொள்கையை. அஃதாவது உற்ற நோய் நோன்றல். ஒண்டொடி : வாசவதத்தை. 217 ஆம் அடியை அடுத்து ஓரடி முழுதும் சிதைந்தது. அஃது அவன் நின்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டு நின் உயிரைப் பேணுதல் வேண்டும் என்னும் கருத்துடையது போலும். ஆயிழை : விளி.