பக்கம் எண் :

பக்கம் எண்:936

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
         
    220   கூடிய கொழுநன் கொழுங்குடர் மிசைகுற
          ஓடிய வுள்ளத் துயர்துணைத் தேவியைக்
          குறையிற் கேட்டுக் கொடுத்துநோய் தணித்த
          மறையில் பெரும்புகழ் மன்னவன் போல
          என்ன தாயினு மீகுவன் மற்றுநின்
    225    இன்னா வெந்நோ யெத்திறத் தாயினும்
          ஒடுங்கா வுள்ளமொ டகற்றுவல் யானெனக்
          கடுஞ்சூ ளறைஇக் காவலன் கேட்ப
 
                   (இதுவுமது)
             220 - 227 : கூடிய.............கேட்ப
 
(பொழிப்புரை) "முன்னொரு காலத்தே கருவுற்றிருந்த கோப்பெருந்தேவி ஒருத்தி வயா நோய் காரணமாகத் தன்னைக் கூடிய கணவனின் கொழுவிய குடரைத் தின்ன விரும்பிய நெஞ்சினை உடையளாய் இருந்தனளாம். உயர்ந்த தன் வாழ்க்கைத் துணையாகிய அத்தேவியை அழியாத பெரும்புகழ் படைத்த மன்னவனாகிய அவள் கணவன் அவள்பால் அவள் விருப்பத்தை அவள் கூறாளாகவும் குறையிரந்தும் கேட்டு அவள் விரும்பியபடியே தன் குடரைக் கொடுத்து அவள் வயா நோயைத் தீர்த்தனனாம். யானும் அம்மன்னவன் போலவே நீ விரும்பும் பொருள் எத்தகையதாயினும் வழங்குவேன்காண் ! நங்காய் மேலும் இந்த இன்னலுடைய வெவ்விய வயா நோய் எத்தகையதாயினும் யான் மடியின்றி அகற்றுவேன் காண்!' என்று கடிய சூள் மொழிந்து அம்மன்னவன் வினவாநிற்றலாலே என்க.
 
(விளக்கம்) ஓடியஉள்ளம் - விரும்பிய நெஞ்சம். மறையில் - மறைதல் இல்லாத. இன்னா - துன்பமுடைய. ஒடுங்கா உள்ளம் - மடிதலில்லாத நெஞ்சம். சூள் - சூளுறவு. காவலன் : உதயணன்.