(பொழிப்புரை) போரின்கண்
பிறக்கிடாத வீரக்கழல் கட்டிய காலையுடைய பெருந்தகையாகிய அவ்வேந்தன் வாசவதத்தை
மொழிந்ததனைக் கேட்டு 'ஒளியுடைய மலர்மாலை யணிந்த நங்காய்! நீ விரும்புவதனை
நிறைவேற்றுதல் எனக்கு எளியதொரு செயலேயாகுங் காண். கவலற்க! யான் அதனைச் செய்து
முடித்தபின் அறிந்துகொள்க,' என்று கூறி அவள்பால் நின்றும் சென்று தனக்கு வரும்
துன்பங்களைத் துவர நீக்கும் தோழரோடு பொருந்தி இன்புறுதற்குக் காரணமான அக்கூட்டத்தே
இனிதாக வீற்றிருந்து தனது ஆர்வத்திற்குக் காரணமான மூங்கில்போலும் தோளையுடைய
அவ்வாசவதத்தையின் வயா நோயைத் தீர்த்தற் பொருட்டுத் தன் நல்லமைச்சராகிய
அத்தோழரோடு ஒருங்கே ஆராய்வானாயினன் என்க.