பக்கம் எண் :

பக்கம் எண்:939

உரை
 
5. நரவாண காண்டம்
 
2. இயக்கன் வந்தது
 
          ஆராய் தோழரொ டரச னதன்றிறம்
          ஓரா விருந்துழி யுருமண் ணுவாவும்
          ஆரர ணமைத்து வாணடு நீண்மதில்
          ஏரணி யுடைய விலாவா ணகமெனும்
     5    ஊர்வயி னின்றும்வந் துதயணற் குறுகி
          வணங்கின னிருந்துழி மணங்கமழ் கோதை
 
                 (உருமண்ணுவா வருதல்)
               1 - 6 : ஆராய்.............இருந்துழி
 
(பொழிப்புரை) இவ்வாறு வாசவதத்தையின் வயாநோய் தீர்த்தற்கு வழியை ஆராய்கின்ற தன் தோழர்களோடு உதயண மன்னன் அவ் வழிவகையைக் கருதிக்கொண்டிருந்தபொழுது உருமண்ணுவா என்னும் அமைச்சன்றானும் பகைவர் கிட்டுதற்கரிய அரண்களை அமைத்துக்கொண்டு வாட்படைகள் நடப்பட்டுள்ள நெடிய மதில்களையும் எடுத்துத் தான் அரசு வீற்றிருக்கும் மிக்க அழகுடைய இலாவாணகம் என்னும் தனது நகரத்தினின்றும் வந்து உதயணனை அணுகி வணங்கி அவனோடிருந்த பொழுது என்க.
 
(விளக்கம்) அதன் திறம் - வயாத் தீர்க்கும் வகையை. ஓராவிருந்துழி - கருதிக் கொண்டிருந்த பொழுது. அரண் அமைத்து மதிலெடுத்துத்தான் அரசு வீற்றிருக்கும் என்க. வாள்நடு மதில் - வாட்படைகள் நடப்பட்டிருக்கும் மதில்.