பக்கம் எண் :

பக்கம் எண்:942

உரை
 
5. நரவாண காண்டம்
 
2. இயக்கன் வந்தது
 
           மதிமயக்கெய்திப் புதுமலர்க் காட்டுட்
     15    டெய்வதை யுண்டெனிற் கையற லோம்புகெனப்
           பாற்படு பலாசி னோக்கமை கொழுநிழற்
           குரவம் பாவைக் குறுமலர் நசைஇ
           அரவ வண்டினம் யாழென வார்ப்பத்
           தெறுகதிர்ச் செல்வன் முறுகிய நண்பகல்
     20    அசைந்தியாங் கிடந்தன மாக வவ்வழி
 
                        (இதுவுமது)
                14 - 20 : புதுமலர்க்............ஆக
 
(பொழிப்புரை) அவ் விளவேனிற் பருவத்தே புதுவதாக மலர்ந்துள்ள அக் காட்டின்கண் இனி இங்கு வனதெய்வங்கள் உளவாயின் எம்முடைய இத்துன்பத்தை அகற்றுவனவாக என்று கையறவு கொண்டு பக்கத்திலிருந்த பலாச மரத்தினது அழகமைந்த கொழுவிய நிழலின்கண் குரவம் பாவையாகிய குறிய மலரின்கண் தேன் பருகுதலை விரும்பி ஓசையையுடைய வண்டுகள் யாழிசை போல முரலாநிற்ப வருத்துகின்ற வெயிலையுடைய கதிரவனுடைய வெப்பம் முதிர்ந்த நண்பகலிலே யாமெல்லாம் இளைப்புற்றுக் கிடந்தேமாக என்க.
 
(விளக்கம்) புதுமலர் என்றமையால் இளவேனிற் பருவம் என்பது பெற்றாம். தெய்வதை - தெய்வம். கையறல் - துன்புறல். பால் - பக்கம். பலாசு - புரசமரம். நோக்கு - அழகு. குராமலரைப் பாவை என்றல் மரபு. நசைஇ - விரும்பி. அரவம் - ஓசை. தெறுகதிர் : வினைத்தொகை.