பக்கம் எண் :

பக்கம் எண்:943

உரை
 
5. நரவாண காண்டம்
 
2. இயக்கன் வந்தது
 
         
     20    அசைந்தியாங் கிடந்தன மாக வவ்வழி
           இசைந்த வெண்டுகி லேற்ற தானையன்
           கைந்நுண் மீக்கோள் கச்சினோ டணவர
           அந்நுண் சாந்த மெழுதிய வாகத்தன்
           காசுகண் ணரிந்து கதிரொளி சுடரும்
     25    மாசில் வனப்பினன் மறுமதித் தேய்வென
           ஏக வார மிலங்கு கழுத்தினன்
           நிழல்படு வனப்பி னீலத் தன்ன
           குழல்படு குஞ்சியுட் கோல மாக
           ஒண்செங் கழுநீர்த் தெரிய லடைச்சித்
     30    தண்செங் கழிநீர்த் தகைமலர்த் தாரினன்
           ஆயிர நிறைந்த வணிமலர்த் தாமரைச்
           சேயொளி புரையுந் திகழொளிக் கண்ணினன்
           களைக ணாகியோ ரிளையவன் றோன்றி
 
                        (இதுவுமது)
               20 - 33 : அவ்வழி..........தோன்றி
 
(பொழிப்புரை) 'அப் பொழுது தன் அழகிற்குப் பொருந்திய வெள்ளைத் துகிலாகிய ஆடையை உடுத்தியவனும் கைத்தொழிலால் நுணுகிய மேற்போர்வையும் கச்சும் அசையாநிற்ப அழகிய நுண்ணிய சந்தனத்தால் எழுதப்பட்ட மார்பையுடையவனும் குற்றத்தை நீக்கி ஞாயிறுபோன்று ஒளிசுடரும் குற்றமற்ற அழகையுடையவனும் களங்கமுடைய திங்களை அராவிவைத்தாற் போன்ற ஒற்றை முத்து வடம் திகழும் கழுத்தையுடையவனும் ஒளியுண்டாகும் அழகோடே நீலமணியையொத்த நிறத்தையுடைய சுருளுடைய தன் தலைமயிரின்கண் அழகாக ஒள்ளிய செங்கழு நீர் மலர்மாலையைச் செருகிக் குளிர்ந்த அச்செங்கழுநீர் மலரால் கட்டப்பட்ட மலர்மாலையை யணிந்தவனும் ஆயிரம் இதழ்கள் நிறைந்த அழகிய தாமரை மலரினது செவ்விய ஒளியை யொத்த விளங்குகின்ற ஒளியையுடைய கண்ணையுடையவனும் ஆகிய ஓரிளைஞன் நமக்குப் புகலிடமாகி நங்கண்முன் தோன்றி' என்க.
 
(விளக்கம்) மீக்கோள் - மேற்போர்வை. அணவர - அசைய. ஆகம் - மார்பு. காசு - குற்றம். வனப்பு - அழகு. மறு - களங்கம். ஏகவாரம் - ஒற்றை முத்துவடம். நிழல் - ஒளி. நீலம் - நீலமணி. குழல்படுதல் - சுருளுதல். குஞ்சி - தலைமயிர். தெரியல் - மாலை. அடைச்சி - செருகி. தகைமலர் : வினைத்தொகை. ஆயிரம் இதழ் என்க. புரையும் : உவமஉருபு. களைகண் - புகலிடம்.