பக்கம் எண் :

பக்கம் எண்:946

உரை
 
5. நரவாண காண்டம்
 
2. இயக்கன் வந்தது
 
           வச்சிர வண்ணனை வழிபட் டொழுகுவேன்
           நச்சு நண்பி னஞ்சுக னென்னும்
           இயக்க னென்னை மயக்கற வுணர்ந்து
     50    மறப்பின் றொழுகு நயப்பொடு புணர்ந்த
           நன்னட் பாளனேன் யானினி நுமக்கென
           என்னட் பறிமி னென்று மென்வயின்
           எள்ள லில்லா துள்ளிய காலை
           ஓதியி னோக்கி யுணர்ந்தியான் வருவேன்
 
                        (இதுவுமது)
               47 - 54 : வச்சிர..........வருவேன்
 
(பொழிப்புரை) அதுகேட்ட அவ்விளைஞன் ''ஐய ! யான் குபேரனை நாளும் வழிபாடுசெய்து ஒழுகும் இயல்புடையேன் யாவராலும் விரும்புதற்குக் காரணமான நட்புப் பண்பினையுடைய நஞ்சுகன் என்பது என் பெயர். யான் ஓர் இயக்கன். என்னை மயக்கமின்றி அறிந்துகொண்டு எப்பொழுதும் என்னை மறவாமே ஒழுகுவீராக! யான் இனி நுமக்கு விருப்பத்தோடு கூடிய ஒரு நல்ல நண்பன் என்று கொண்மின் ! என் நட்பினை நீங்கள் இடருற்றுழி அறிந்துகொள்ளுங்கோள். நீவிர் என்றும் என்பால் இகழ்ச்சி இல்லாதிருந்து என்னை நினைத்தபொழுது யான் என்னுடைய ஓதி ஞானத்தால் நோக்கி உங்கள் நினைப்பினையறிந்து அப்பொழுதே நும்பால் வருவேன்'' என்க.
 
(விளக்கம்) வச்சிரவண்ணன் - வைச்சிரவணன் என்னும் வடமொழிச்சிதைவு. குபேரன் என்பது பொருள். நச்சுநண்பு : வினைத்தொகை. நஞ்சுகன் - அவன் பெயர். மறப்பின்றொழுகும் - மறவாதே ஒழுகுங்கள். என் நட்பினை இடையூறுற்றுழி அறிமின் என்றவாறு. உள்ளியகாலை - நினைந்த காலத்தே. ஓதி - முக்காலமும் அறியும் ஒரு வகை அறிவு.