பக்கம் எண் :

பக்கம் எண்:95

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           கண்டோர் பெயர்த்துக் காண்ட லுறூஉம்
           தண்டா வனப்பின் றகைமைய ளாகிய
     150    கன்னி யாகங் கலக்கப் பெறீஇயரெனப்
           பன்மலர்க் காவினுட் பகலு மிரவும்
           உறையு ளெய்திய நிறையுடை நீர்மை
           இளையோ னமைந்த காலை மற்றுத்தன்
           தளையவிழ் கோதைத் தைய லிவளெனும்
     155   மைய லுள்ளமொடு பைத லெய்தி
 
          (உதயணன் நிலை)
       148-155 : கண்டோர்,,,,.,,,.,,,எய்தி
 
(பொழிப்புரை) ஒருமுறை கண்டோர் மீண்டும் மீண்டும்
  காண்டற்குக் காரணமாய்க் கண்டு கண்டமையாத பேரழகின் தகுதியையுடைய
  இக்கன்னியை யான் கூடப்பெறுவேனாக என்று பலவாகிய மலரையுடைய
  பொழிலிலே பகலும் இரவுமாகிய இரு பொழுதினும் தங்கியிருந்த தனது
  நிறையுடைந்துபோன தன்மையுடைய உதயணன் இருந்தபொழுது பின்னரும்
  ஒருகால் இவள் கட்டவிழ்ந்த மலர்மாலையையுடைய தன் காதலியாகிய
  வாசவதத்தையே என்னும் மயக்கவுணர்வினோடு துயரமெய்தி என்க.
 
(விளக்கம்) மயக்கங் காரணமாக ஒருமுறை இவள்
  ஓர் அரச கன்னி என்று கருதியும் மீண்டும் இவள் வாசவதத்தைதானோ
  என்று கருதியும் உதயணன் அல்லலுற்றான்  என்பது கருத்து. இவள்
  கன்னியாயின் இவளை நான் கூடப்பெறுவேனாக என்று கருதினன் என்க.
  தண்டாவனப்பு-கண்டு கண்டமையாமைக்குக் காரணமான பேரழகு.
  கன்னி - பதுமாபதி பெறீஇயர் - பெறுக. காகதுண்டக முனிவன் கூறியபடி
  தான் மேற்கொண்டிருந்த நிறை உடைந்த நீர்மை என்க.
  இளையோன் - உதயணன். தன் தையல் என்றது வாசவதத்தையை.
  பைதல்-துயரம்.