பக்கம் எண் :

பக்கம் எண்:951

உரை
 
5. நரவாண காண்டம்
 
3. இயக்கன் போனது
 
         
      5    கிளையின் மன்னர் கேளிர் சூழத்
           தளையகப் பட்ட காலையுந் தளையவிழ்
           வண்ணக் கோதை வாசவ தத்தையொடு
           பண்ணமை பிடிமிசைப் படைநரு மொழியத்
           தனியே போந்தோர் கனிகவர் கானத்துக்
     10    கூட்டிடைப் பட்ட கோட்புலி போல
           வேட்டிடைப் பட்ட வெவ்வப் பொழுதினும்
 
                     (இயக்கன் கூற்று)
              5 - 11 : கிளையின்..........பொழுதினும்
 
(பொழிப்புரை) ''நண்பனே ! நீ நின் பகைமன்னனாகிய பிரச்சோதனனுடைய உறவினர் நின்னைக் காட்டின்கண் சூழா நிற்ப நீ அவர்பால் சிறையாக அகப்பட்ட காலத்திலாதல், அல்லது கட்டவிழ்ந்து மலர்ந்த வண்ணமிக்க மலர் மாலையையணிந்த வாசவதத்தையோடு ஒப்பனை செய்யப்பட்ட ஒரு பிடி யானையின்மேல் ஏறிக்கொண்டு நின் படை மறவரும் இன்றித் தனியாக வந்து வழியின்கண் கனிகள் கவர்ந்துண்ணும் ஒரு காட்டிடத்தே கூட்டின்கண் அகப்பட்ட கொலைத்தொழிலையுடையதொரு புலிபோல வேடர் கையிலே அகப்பட்டுக்கொண்ட துன்பமிக்க அந்தக் காலத்திலாதல்'' என்க.
 
(விளக்கம்) கிளையில் மன்னர் - பகைமன்னர். ஈண்டு மன்னர் என்றது பிரச்சோதனனை. உதயணன் மாமன் ஆதல் கருதி உயர்த்து மன்னர் என்றான். கேளிர் என்றது சாலங்காயன் முதலியோரை. தளை - இரண்டனுள் முன்னது சிறை; பின்னது கட்டு. பிடி - பத்திராபதி. கோட் புலி - கொலைத்தொழிலையுடைய புலி. வேட்டிடை - வேடரிடத்து. எவ்வப்பொழுது - துன்பக்காலத்து.